Press "Enter" to skip to content

கடந்த தேர்தலில் கொள்கை பேசியவர்கள் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள் – கேஎஸ் அழகிரி

தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி எனவும் தமிழ்நாட்டு மக்கள் நலன்சார்ந்த கூட்டணி எனவும் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகிற வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெறுகிற அளவிற்கு வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்கினீர்கள்.

அடுத்து, சட்டமன்றத் தேர்தலிலும் அமோக அதரவு வழங்கி பத்தாண்டு கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு தமிழகத்தில் நல்லாட்சி அமைகிற வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை வழங்கினீர்கள். இறுதியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தனித்தனியாக பிரிந்து போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலில் கொள்கை பேசியவர்கள் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். காரணம், இவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாதிகளாக இருப்பதால் இவர்களால் கூட்டணி அமைக்க முடியவில்லை.

ஆனால், தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் நலன்சார்ந்த கூட்டணி. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு விரோதமாக எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கிற கூட்டணி. எனவே, தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள கூட்டணியாக விளங்குவதால் மக்கள் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ.க.விற்கும், 10 ஆண்டுகால மக்கள் விரோத, அராஜக ஊழல் ஆட்சி நடத்திய அ.தி.மு.க.விற்கும் பாடம் புகட்டுகிற வகையில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர் கட்சி சின்னங்களில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இதன்மூலம் தமிழக ஆட்சியில் நிறைவேற்றப்படுகிற மக்கள் நலத் திட்டங்கள் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக மக்கள் பயனடைகிற வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களவையில் சமீபத்தில் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றிய போது கூறியபடி தமிழ்நாட்டில் பா.ஜ.க. நுழைய முடியாது என்பதை வாக்காளர்கள் நிச்சயம் உறுதி செய்வார்கள்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் உடன்பாட்டிற்கு எதிராக போட்டியிடுகிற காங்கிரஸ் வேட்பாளர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »