Press "Enter" to skip to content

உக்ரைனிலிருந்து இந்தியர்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் நீக்கம்- அதிக விமானங்கள் இயக்க முடிவு

உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

புதுடெல்லி:

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது.

எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன.

எல்லையில் இருந்து ரஷியா படைகள் திரும்ப பெறப்படுவதாக ரஷியா அரசு அறிவித்தாலும் அதனை அமெரிக்கா, உக்ரைன் ஏற்கவில்லை.

உக்ரைனில் போர் பதட்டம் தொடர்ந்தபடி இருப்பதால் அங்கிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

தற்போதுள்ள விமான சேவையை பயன்படுத்தி மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

போர் சூழல் நிலவுவதன் காரணமாக உக்ரைனில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். உக்ரைனில் 18 ஆயிரம் மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உக்ரைனில் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். தங்களது பிள்ளைகளை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கான விமான சேவையை அதிகரிக்க ஆலோசனை நடத்தியது.

இந்தியா – உக்ரைன் இடையே அதிக விமானங்களை இயக்குவது தொடர்பாக விமான நிறுவனங்களுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வர அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியா – உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்கள் மற்றும் இருக்கைகளுக்கான எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

தேவைக்கு ஏற்ப எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. விமான சேவைகளை அதிகரிக்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அனைத்து வசதிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் இருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற முயற்சிப்பதால் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவது தொடர்பாக அறிந்து கொள்ள தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.

அதே போல் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »