Press "Enter" to skip to content

காவல் துறையினர் தந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசினேன்- ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு

அவதூறுகளை பரப்புவது என்பது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு குறித்து பேசி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட காரணமாக இருந்த கட்சி மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த தி.மு.க.

ஆனால், அந்த ஜல்லிக்கட்டுத் தடையை தகர்த்தெறிந்த கட்சி அ.தி.மு.க. இந்த வரலாறு தெரியாமல், “இளைஞர்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராடிய போது முதலில் களத்திற்கு வந்தது நான்தான்” என்று தி.மு.க. தலைவர் பேசியிருக்கிறார். அதே சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது யார் என்று தி.மு.க. தலைவர் சொல்லவில்லை.

2011-ம் ஆண்டு ஜனவரி மாதம், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஅமைச்சகத்தின் பிராணிகள் நலப்பிரிவு, ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்தது.

அதாவது, பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன்கீழ், புலிகள், கரடிகள் ஆகியவற்றுடன் காளையையும் சேர்க்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது.

இதன் அடிப்படையில், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, தனது 11.7.2011 -ம் நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுதான் ஜல்லிக்கட்டு தடைக்கு முதற் முழுக் காரணம்.

அப்போது மத்தியஅரசில் அங்கம் வகித்தது யார் என்றால் தி.மு.க. ஏன் அப்போது தி.மு.க. வாய் திறக்கவில்லை? காரணம் சுயநலம்! பொது நலத்தைப்பற்றி தி.மு.க. விற்கு எப்போதுமே அக்கறை கிடையாது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என பிரதமரை நான் வலியுறுத்தி வந்தேன். 19. 1.2017 அன்று புதுடில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து, இதுபற்றி விரிவாக விவாதித்தபோது, மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெற மாநில அரசு உடனடியாக சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, மத்திய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில், மாநில அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் 23.1.2017அன்றுதான் துவங்குகிறது என்பதாலும், சாதாரணமாக சட்ட முன் வடிவுகளுக்கான சட்டமன்ற ஒப்புதல் கூட்டத்தொடரின் கடைசிநாளிலேயே பெறப்படும் என்பதாலும், அதன் பின்னர், ஆளுநர் மூலமாக இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதாலும், இவை அனைத்திற்கும் காலதாமதம் ஏற்படும் என்பதாலும், அவசரச் சட்டம் பிறப்பிக்க முடி வெடுக்கப்பட்டு, அவ்வாறே அவசரச் சட்டம் 21.1.2017 அன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தஅவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது அ.தி.மு.க.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தேசவிரோதப் போராட்டம், சமூகவிரோதப் போராட்டம், பயங்கரவாதப் போராட்டம் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் பேசியதாக குறிப்பிட்டு இருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உண்மை நிலை என்னவென்றால், இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன், இப்போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பெரியவர் அம்பலத்தரசர், ராஜேஷ், ஹிப் ஹாப்தமிழா என்கிற ஆதி ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூடி போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்றும் அனைவரும் போராட்டத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையும் மீறி ஒரு சிலர் காவேரி நதிநீர் விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை, பன்னாட்டு வர்த்தகங்கள் மீதான தடை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்ததோடு, இந்திய இறையாண்மைக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து தனித் தமிழ்நாடாகஅறிவிக்க வேண்டுமென்றும், இந்தியக் குடியரசுத் தினத்தை கருப்பு தினமாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார்கள்.

இதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் அளித்ததன் அடிப்படையில் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தான் நான் சட்டமன்றப் பேரவையில் எடுத்து விளக்கினேனே தவிர, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நான் ஒருபோதும் தேசவிரோதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, சமூகவிரோதிகள் என்றோ குறிப்பிடவில்லை.

இன்னும் சொல்லப்போனால், இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரிடம் நான் எடுத்துக் கூறுவதற்காக டெல்லி செல்ல இருந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாக என்னுடைய டெல்லி பயணத்தை சற்று தள்ளிவைத்து விட்டு அவர்களுடன் உரையாடினேன்.

நான் டெல்லி செல்ல இருக்கிறேன் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்களும் முழு திருப்தியடைந்து, நீங்கள் சென்று வாருங்கள் என்று என்னை வழியனுப்பினார்கள்.

ஜல்லிக்கட்டு குறித்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வி‌ஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க. தலைவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது என்பது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »