Press "Enter" to skip to content

மாட்டுத் தீவன ஊழல்: 5-வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1997 வரையில் 2 முறை முதல்- மந்திரியாக இருந்தார். அவர் முதல்-மந்திரியாக இருந்த காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டு ஊழல் நடந்தது. இவ்வாறு 950 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

1996-ம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் முதல்- மந்திரி ஜெகநாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ஜெகதீஷ் சர்மா, அப்போதைய கணக்கு குழு தலைவர் துருவ் பகத், கால்நடை துறை உதவி இயக்குனர் கே.எம். பிரசாத் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தும்கா, தியோகர், சாய்பசா ஆகிய கருவூலங்களில் நடந்த ஊழல் தொடர்பான 4 வழக்குகளிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் 7 வருட தண்டனை அவருக்கு முடிந்து விட்டது. தற்போது லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் டோரண்டா கருவூலத்தில் இருந்து ரு. 139.5 கோடி பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முதலில் 170 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 55 பேர் இறந்து விட்டனர். 7 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறினார்கள். 2 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 6 பேர் தலை மறைவானார்கள். வக்கீல்கள் வாதம் கடந்த மாதம் 29-ந் தேதி முடிவடைந் தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75 பேரை குற்றவாளியாக அறிவித்து ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 15-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரின் தண்டனை விவரத்தை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நீதிமன்றம் இன்று பிற்பகல் அறிவிக்கும் என தெரிவித்திருந்தது. அதன்படி இன்று மதியம் தீர்ப்பை வாசித்தது.

அப்போது நீதிபதி, லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

லாலு பிரசாத் யாதவுக்கு 2013-ம் ஆண்டு கால்நடை தீவன வழக்கில் முதல் தண்டனை வழங்கப்பட்டது. சாய்பசா கருவூலத்தில் ரூ. 37.67 கோடி ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ரூ. 89.27 லட்சம் மோசடி வழக்கில் (தியோகர்) 3½ ஆண்டு தண்டனை கிடைத்தது.

2018-ம் ஆண்டு சாய்பசா கருவூலத்தில் ரூ. 33.67 கோடி வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதே ஆண்டில் 4-வது வழக்கில் (தும்கா ரூ. 3.5 கோடி ஊழல்) 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »