Press "Enter" to skip to content

பஜ்ரங் தளம் நிர்வாகி படுகொலை- கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது

பஜ்ரங் தளம் நிர்வாகி ஹர்ஷா கொலைக்கு நீதி கேட்டு போராட்டங்களில் பங்கேற்றுள்ள சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா நேற்று இரவு வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹர்ஷாவின் உடல் சிவமொகாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

எனினும், ஹர்ஷா கொலைக்கு நீதி கேட்டு நகரின் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்றுள்ள சிலர் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.  இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவாமல்  தடுக்கும் வகையில் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஹர்ஷாவின் குடும்பத்தினரை மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா சந்தித்து ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஹர்ஷாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது பெற்றோரிடம் உறுதி அளித்தேன். இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »