Press "Enter" to skip to content

உக்ரைன் அண்டை நாடுகள் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை

ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா நாடுகளுடன்,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சு வார்த்தை
நடத்தி உள்ளது.

புதுடெல்லி:

ரஷிய ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளது. 

இந்நிலையில் உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுமாறு ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய மாணவர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. 

இது தொடர்பாக உதவி கோரி, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகளுடன், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் பேசியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள், தங்கள் நாடுகளின் வழியே இந்தியா திரும்ப ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் போலந்தில் உள்ள இந்திய தூதரகம் போலந்து-உக்ரைன் எல்லையில் உள்ள க்ராகோவிக் நகரில் ஒரு முகாம் அலுவலகம் அமைத்துள்ளது. இதன் மூலம் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் போலந்து வழியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி மூலம் பேசினார்.  

உக்ரைனில் தற்போதைய போர் சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து இந்த உரையாடலின் போது விவாதிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »