Press "Enter" to skip to content

உக்ரைன் மீது தொடர்ந்து 2வது நாளாக ரஷியா தாக்குதல்

ரஷியாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைன் நாடு நிலைகுலைந்து போனது. தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டதால் மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர். பலர் வீடுகள் அருகே அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில் பதுங்கினர்.

கீவ்:

சுரங்க பாதைகளில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் குண்டுகள் விழுந்து விடுமோ என்ற பயத்தில் பலர் வெளியேறினர். அவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்தனர். இதனால் தலைநகர் கீவ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உக்ரைனில் ராணுவ நிலைகள் மீது மட்டும்தான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட வில்லை என்றும் ரஷிய ராணுவம் தெரிவித்தாலும் அங்குள்ள பல வீடுகள் குண்டு வீச்சில் சேதம் அடைந்தன. இதனால் மக்கள் கடும் பீதியில் உறைந்தனர்.

நேற்று அதிகாலை தொடங்கிய தாக்குதலை ரஷியா இடை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தியது. இரவிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷியாவின் ஆக்ரோச தாக்கு தலை உக்ரைன் ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை.

இதனால் பல இடங்களில் உக்ரைன் ராணுவத்தினர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. உக்ரைன் மீது 3 மணியில் இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த நாடு முற்றிலும் செயலிழந்தது. இதனால் ரஷிய படை வீரர்கள் எளிதாக உக்ரைனுக்குள் நுழைந்தனர்.

குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்ற அவர்கள் தீவிரம் காட்டினர். கீவ் நகரை நோக்கி ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியபடி முன்னேறியது. அவர்களுக்கு உதவியாக வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது.

ரஷியாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலியாகி உள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாகவும் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசியது. தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷியா தீவிரமாக உள்ளதால் இன்று அதிகாலை அந்த நகரை குறி வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.

அந்த நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கீவ் நகரை நோக்கி முன்னேறும் ரஷிய படைகள் அதனை கைப்பற்ற நெருங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் விரைவில் உக்ரைன் தலைநகர் ரஷிய படையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விடும் என்று தெரிகிறது. கீவ் நகரில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள், விமான நிலையம் ஆகியவை ரஷிய படையிடம் சென்று விடும் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் அவர்கள் சுரங்கப் பாதைகளிலேயே தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.

கீவ்வை போலவே மற்ற நகரங்களையும் ரஷிய படை சுற்றி வளைத்து இருக்கிறது. அங்கும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய அணுஉலை நிலையத்தையும் ரஷியா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

இதனால் உக்ரைன் நாடு முழுவதையும் விரைவில் ரஷியா கைப்பற்றி விடும் நிலை உள்ளது.

இதையும் படியுங்கள்… ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »