Press "Enter" to skip to content

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை- பா.சிவந்தி ஆதித்தன் உள்பட உறுப்பினர்கள் நியமனம்

நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை:

தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த பா.சிவந்தி ஆதித்தன் உள்பட உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-22-ம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் 5.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், செய்தித்துறை அமைச்சர், “தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்-அமைச்சர் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.

அதனடிப்படையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் நலவாரியத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பத்திரிகையாளர் நலவாரியக் குழு ஒன்றை அமைத்து, அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து அரசு ஆணையிடுகிறது.

செய்தித் துறை அமைச்சர் அதன் தலைவராக இருப்பார். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆணையர், நில நிர்வாகத் துறை ஆணையர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் (அல்லது, இந்த அதிகாரிகளால் நியமனம் செய்யப்படும் அலுவலர்) ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

‘தினத்தந்தி’ குழுமத்தின் பா.சிவந்தி ஆதித்தன், தினகரன் நாளிதழ் ஆசிரியர் ஆர்.எம். ஆர்.ரமேஷ், ‘தி இந்து’ நாளிதழ் துணை ஆசிரியர் பி.கோலப்பன், தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ். கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நிருபர் எம் ரமேஷ், ‘தி வீக்‘ செய்தி வார இதழின் முதன்மை சிறப்பு நிருபர் லெட்சுமி சுப் பிரமணியன் ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாக செயல்படுவார்கள்

1.12.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படி பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக்குழு கலைக்கப்படுவதுடன் பத்திரிகையாளர் நலவாரிய புதிய நல உதவித்திட்டங்களுக்கு அமைக்கப்படும் இந்த குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு முயற்சி

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »