Press "Enter" to skip to content

உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

உக்ரைன் போர் விடுக்கும் பல சவால்களை எதிர்கொண்டு பொருளாதார வளர்ச்சி காண்பது, அரசு எடுக்கும் சாமர்த்தியமான நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்.

2 நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டை பாதிக்குமா? தற்போதுள்ள உலகமய பொருளாதாரத்தில், நிச்சயமாக எல்லா நாடுகளுமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும். அப்படியானால், உக்ரைன் போர் இந்தியாவுக்கு என்ன விதமான பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?.

உக்ரைன் போரின் விளைவாக நேரடி, மறைமுக, செயற்கை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி வரும். எப்போதுமே பதற்றமான சூழல் உருவாகிறது என்றால், அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முனையத்தான் செய்வார்கள். இதன் காரணமாக செயற்கைப் பற்றாக்குறை அல்லது விலையேற்றம் ஏற்படும்.

குறிப்பாக, யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் வணிகத்தில் உடனடியாக இதன் பாதிப்புகளை அறிய முடியும். இதனால்தான், போர் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தேசியப் பங்குச் சந்தையில் கடுமையான மாற்றம் இருந்தது.

இதேபோன்று, அத்தியாவசியப் பொருட்களுக்கும் செயற்கையான தட்டுப்பாடு உண்டாகலாம். இவற்றை உன்னிப்பாகக் கவனித்து அரசாங்கம் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும். அதுவரையில் செயற்கை விலையேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டி வரும்.

உக்ரைன் கோதுமை உற்பத்தி, ஏற்றுமதிக்குப் பெயர் பெற்ற நாடு. போரின் காரணமாக இந்த நாட்டுடன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு கோதுமை விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். இந்த நாடுகள் தமது தேவைக்காக இந்தியாவை அணுக வேண்டி வரும். இதனால் நமது நாட்டின் கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கலாம். நமக்கு நல்லதுதான். ஆனால் இதுவே பாதகமாகவும் இருக்கக் கூடும்.

வெளிநாட்டுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறபோது, நம் மக்களின் உள்நாட்டுத் தேவைக்கான கோதுமை வரத்து குறைந்து போகும். இதனால் கோதுமை விலை ஏறக்கூடும். வடமாநிலங்களில் உள்ள சாமான்யர்களை இது கடுமையாக பாதிக்கும். ஆனால் கோதுமை விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் கிடைக்கிற விதத்தில் ஏற்றுமதி சாத்தியம் எனில் மிகவும் நல்லதுதான்.

அடுத்த சில வாரங்களுக்கேனும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் தேவை திடீரென்று பல மடங்கு அதிகரிக்கும். இது நமக்கு நல்லதல்ல. காரணம், திடீர் தேவையைக் கருத்தில் கொண்டு, நமக்கு ஏற்றுமதி செய்கிற நாடுகள், விலையை உயர்த்தவே செய்யும்.

நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, செங்குத்தாக ஏறுவதற்கு சாத்தியங்கள் மிக அதிகம். சாமான்யர்களை நேரடியாக பாதிக்கக்கூடிய இந்த விலையேற்றம் பண வீக்கத்துக்கும் வழிகோலும். இதன் தொடர் விளைவாக, பல பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும்.

இவை உக்ரைன் போரின் நேரடி விளைவுகள். மறைமுக பாதிப்புகளும் ஏராளமாக உண்டு. ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கும். இந்தியாவும் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்று இந்த நாடுகள் எதிர்பார்க்கும். இந்தியா இதற்கு உடன்படுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இந்த நாடுகளின் கோபத்துக்கு நாம் ஆளாக நேரும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுடன் நமக்கு இருக்கும் ராஜிய உறவுகள், சரக்கு வர்த்தகத்துடன் நின்று விடுவதில்லை. இந்திய இளைஞர்களுக்கான மிக முக்கிய வேலைவாய்ப்பு மையங்களாகவும் இவை திகழ்கின்றன. குறிப்பாக ‘சேவைத் துறையில் நமக்கு இருக்கிற பல தொடர்புகள், தொழில் ஒப்பந்தங்கள் என்னவாகும்?’ என்கிற கேள்வி எழலாம்.

ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் மூலம் நமக்குக் கிடைத்து வரும் பொருளாதார ஆதாயங்களில் சிறிய தொய்வு ஏற்பட்டாலும், தற்போதுள்ள பொருளாதார நிலைமையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். வெளிநாடுகளுக்கு சென்று, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், உயர்கல்வி பெற வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆசைக்குத் தற்காலிகமாகத் தடை வரலாம்.

மற்ற பிற நாடுகளுடன் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு காலம் பிடிக்கும். அதுவரை மேற்கல்வியை நிறுத்திவைக்கவா முடியும்?. அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் தொடர்ந்த முன்னேற்றம் சாத்தியமாக வேண்டும் எனில், அமெரிக்காவுடன், ஐரோப்பிய நாடுகளுடன் சுமுகமான பரிவர்த்தனைகள் மிகவும் அவசியம்.

உக்ரைன் போர் விடுக்கும் பல சவால்களை எதிர்கொண்டு பொருளாதார வளர்ச்சி காண்பது, அரசு எடுக்கும் சாமர்த்தியமான நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும். இதனை மத்திய – மாநில அரசுகள் நன்கு உணர்ந்து சரியான திசையில் பயணிக்கும் என்று திடமாக நம்பலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இதையும் படிக்கலாம்….ரஷியா-உக்ரைன் இருநாட்டு படை பலம்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »