Press "Enter" to skip to content

உக்ரைனில் தூக்கமின்றி தவிக்கும் தமிழக மாணவர்கள்- பழனி திரும்பியவர் பேட்டி

உக்ரைனில் போர் சூழலில் தமிழக மாணவர்கள் தூக்கமின்றி தவிப்பதாக பழனி திரும்பிய மாணவர் கூறி உள்ளார்.

பழனி:

உக்ரைன் நாட்டில் தற்போது போர் உச்சகட்ட நிலையில் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவ் நகரில் போர் பதட்டம் அதிகமாக உள்ளதால் கட்டிடங்களுக்கு அடியில் மாணவர்கள் தங்கி உள்ளனர்.

இந்திய தூதர அதிகாரிகள் இந்திய மாணவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 தமிழக மாணவர்கள் உள்பட 219 பேர் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். மேலும் 2 விமானங்கள் இன்று டெல்லி வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைனில் இருந்து பழனி திரும்பிய மாணவர் கோகுலபிரியன் கூறுகையில், கீவ் நகரில் இருந்து கிளம்பும்போதும் ராணுவமும் உலங்கூர்திகளும் உலா வந்தவண்ணம் இருந்தது.

போர் சூழல் உருவானதால் இந்திய தூதரகம் கொடுத்த அறிவுறுத்தலின்படி பெற்றோரிடம் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் உடனே கிளம்பி வரும்படி கூறினர். அதனைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து விமான அனுமதிச்சீட்டு பதிவு செய்தோம். அதற்கு பின்னர் பல மாணவர்களுக்கு அதிக விலை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சிலருக்கு அனுமதிச்சீட்டு கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.

கீவ் நகரில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தோம். பின்னர் ஒரு வழியாக பழனி வந்து சேர்ந்தேன். தற்போது மாணவர்கள் அங்கு இரவு நேரங்களில் போதிய உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

போர் சூழல் காரணமாக எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் தூக்கத்தை தொலைத்துள்ளனர். இதற்காக பதுங்கு குழிகள் மற்றும் குண்டு தாக்காத இடங்களில் பதுங்கி உள்ளனர். அவர்கள் அங்கு சிரமப்படுவது கவலை அளிக்கிறது என்றார்.

இதையும் படியுங்கள்… பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »