Press "Enter" to skip to content

தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்தும், இந்தியாவில் 2014-ம் ஆண்டில் இருந்தும் போலியோ இல்லாத நிலை உள்ளது.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. சென்னையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகளை பயன்படுத்தி தடுக்கப்படக்கூடிய 12 வகையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்தும், இந்தியாவில் 2014-ம் ஆண்டில் இருந்தும் போலியோ இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலை தொடர்ந்திடும் வகையில், இந்த ஆண்டு 27-வது போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.

இந்த மையங்களில் 5 வயது வரை உள்ள 57.61 லட்சம் குழந்தைகளுக்கு (6 வயதிற்குட்பட்ட கூடுதலான குழந்தைகள் உள்பட) போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான இன்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், தொடர் வண்டி நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் இப்பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேலு எம்.எல்.ஏ., முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதா கிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, செந்தில்குமார், மருத்துவர் எஸ். உமா, டி.எஸ்.செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்… கடலூர் மாநகராட்சி விடுதலை சிறுத்தைக்கு மேயர் பதவி கிடைக்குமா?- திருமாவளவன் பேட்டி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »