Press "Enter" to skip to content

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷிய அதிபர் புதினின் மெழுகு சிலை அகற்றம்

ரஷிய அதிபர் புதின் மெழுகு சிலை இருந்த இடத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிடிப்பார் என்று அருங்காட்சியக இயக்குனர் யெவெஸ் டெல்ஹோமியோவ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கியத் தலைவர்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் ரஷிய அதிபர் புதினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை புதினின் மெழுகு சிலை கிடங்கு ஒன்றில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சிலைகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த புதினின் சிலைக்கு பதிலாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மெழுகு சிலையை வைக்க அருங்காட்சியகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியக இயக்குனர் யெவெஸ் டெல்ஹோமியோவ் கூறியதாவது:-

அருங்காட்சியகத்தின் வரலாற்றில் முதல்முறையாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக ஒரு சிலையை திரும்பப் பெறுகிறோம். புதினின் சிலை கடந்த வாரத்தில் பார்வையாளர்களின் தாக்குதலுக்கும் உள்ளானது.

புதின் சிலை இருந்த இடத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிடிப்பார். ரஷியாவை எதிர்த்ததற்காகவும், தனது நாட்டை விட்டு வெளியேற மறுத்ததற்காகவும் அவர் மக்கள் மத்தியில் கதாநாயகனாகிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. போரில் இதுவரை 498 ரஷிய வீரர்கள் பலி- அரசு முதல் முறையாக உறுதி செய்தது

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »