Press "Enter" to skip to content

ஆரணி பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல்: 3 பெண் கவுன்சிலர்கள் காரில் கடத்தல்

ஆரணி பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 10-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கண்ணதாசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியபாளையம்:

ஆரணி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 10 இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றிருந்தனர். தி.மு.க. 3 வார்டுகளையும், அ.தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு வார்டையும் கைப்பற்றி இருந்தன.

தேர்தல் முடிவுக்கு பின்னர் 4 சுயேட்சை வேட்பாளர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் ஆரணி பேரூராட்சியில் தி.மு.க.வின் பலம் அதிகரித்தது.

இன்று காலை நடந்த பேரூராட்சி தலைவர் தேர்தலில் 7-வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.

காலையில் தலைவர் தேர்தலில் பங்கேற்பதற்காக வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆரணி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். ராஜேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.

அப்போது 3-வது வார்டு சுயேட்சை உறுப்பினர் பிரபாவதி, 12-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் சந்தான லட்சுமி, 13-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் பொன்னரசி ஆகிய 3 பேரையும் காரில் வந்த மர்ம கும்பல் கடத்திச்சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த பிரபாவதியின் கணவர் சேஷாராவ் தனது 3 வயது குழந்தையுடன் அங்கு வந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மனைவியை உடனடியாக மீட்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

அவரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். காரில் கடத்தப்பட்ட 3 பெண் கவுன்சிலர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஆரணி பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 10-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கண்ணதாசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்… கர்நாடகா மாணவர் உயிரிழந்த விவகாரம் – உடலை கொண்டு வருவது குறித்து பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »