Press "Enter" to skip to content

10 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை கடந்தது தமிழ்நாடு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 91.54 சதவிகிதம் பேருக்கும், இரண்டு தவணை 72.62 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு ஜன.16 அன்று தொடங்கி பல நிலைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் முதலில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பின்பு, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என்று தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நாட்களில் நடைபெற்று வந்திருக்கிறது. அதன்பிறகு 15 வயது முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டம் எனப் பல நிலைகளில் கடந்த ஓராண்டாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு இயக்கமாகவே மாறி நடைபெற்று வருகிறது. வீடுகள் தோறும் தடுப்பூசி, ஊர்கள் தோறும் தடுப்பூசி, மெகா தடுப்பூசி முகாம்கள் என்று பல வாறாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் இதுவரை 22 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. நாளை 23வது வாரம் மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி, முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி, 15 வயது முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு அனைத்து முகாம்களிலும் உறுதி செய்யப்பட்டு நடத்தப்படவிருக்கிறது. 

கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் 10 கோடி தடுப்பூசியை எட்டியதாக செய்திகள் வந்தது. ஏற்கெனவே இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மேற்குவங்காளம், மத்திய பிரதேசம், போன்ற பெரிய மாநிலங்களில் 10 கோடி தடுப்பூசிகள் இலக்கை எட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் சற்று முன்பு வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 தடுப்பூசிகள் இன்று மாலை வரை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும்.

ஜன.16 அன்று தொடங்கிய தடுப்பூசி தினந்தோறும் 61,441 என்ற அளவில் செலுத்தப்பட்டு வந்தது. மே-6 வரை 103 நாட்கள் வரை 63 லட்சத்து 28 ஆயிரத்து 407 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தது. இப்போது 10 கோடி அளவில் தடுப்பூசி தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி 91.54 சதவிகிதம் பேருக்கு, 5 கோடியே 29 லட்சத்து 91 ஆயிரத்து 453 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 72.62 சதவிகிதம் பேருக்கு, 4 கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்து 903 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

15 வயது முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி 33 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசி 83.19 சதவிகிதம் பேருக்கு 27 லட்சத்து 83 ஆயிரத்து 455 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 28 நாட்கள் கழிந்தபின்பு, இரண்டாவது தவணை தடுப்பூசி 47.17 சதவிகிதம் பேருக்கு 15 லட்சத்து 78 ஆயிரத்து 771 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் 8 லட்சத்து 45 ஆயிரத்து 289. இதில் 6 லட்சத்து 37 ஆயிரத்து 264 பேருக்கு 76.57 சதவிகிதம் பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 24 மணிநேரமும் தடுப்பூசி 67 இடங்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் செலுத்தப்படுகிறது.  கையிருப்பாக 92 லட்சத்து 686 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. 12 வயதினருக்கான தடுப்பூசி 21 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்தப் பிறகு அத்தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கின்றன,

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »