Press "Enter" to skip to content

உக்ரைனில் துறைமுகம் உள்ள மரியுபோல் நகரை ரஷிய படை பிடித்தது

ரஷிய ராணுவ வீரர்களும் நகரங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் தெருக்களில் துப்பாக்கி சண்டைகளில் ஈடுபடுகின்றனர்.

கீவ்:

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவின் தாக்குதல் இன்று 10-வது நாளாக தொடர்கிறது.

தொடக்கத்தில் உக்ரைனின் விமான நிலையங்கள், ராணுவ உள்கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீச்சு, விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.

ரஷிய ராணுவ வீரர்களும் நகரங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் தெருக்களில் துப்பாக்கி சண்டைகளில் ஈடுபடுகின்றனர்.

ரஷியா தற்போது வான், கடல், தரை ஆகிய மும்முனை தாக்குதலில் ஆக்ரோ‌ஷமாக ஈடுபட்டு வருகிறது. உக் ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது.

குறிப்பாக தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. அந்த நகரங்களில் உள்ள முக்கிய கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. சமீபத்தில் கெர்சான் நகரை ரஷிய படை முழுமையாக கைப்பற்றியது.

உக்ரைனின் முக்கிய துறைமுக நகராக மரியுபோல் உள்ளது. தெற்கில் உள்ள இந்த நகரை கைப்பற்ற ரஷியா ராணுவம் சில நாட்களுக்கு தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடல் வழியாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வந்தனர். மேலும் தரைப் படையும் அந்நகருக்குள் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் தீவிர தாக்குதலுக்கு பிறகு துறைமுக நகரான மரியுபோலை ரஷிய ராணுவம் பிடித்தது. இதனை அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து மரியுபோல் நகர மேயர் வாடிம் பாய் சென்கோ கூறும்போது, “ரஷிய படைகளின் முற்றுகையில் இருந்து வெளியேறுவதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் தேடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் துறைமுக நகரான ஒடேசாவையும் கைப்பற்ற ரஷியா தீவிரமாக உள்ளது.

உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ்வில் இன்றும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்நகரில் பல்வேறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்டு வெடித்தன என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏவுகணைகள் மற்றும் விமானங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள சிறிய நகரங்களை ரஷிய படை கைப்பற்றி உள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களை இதுவரை கைப்பற்றவில்லை. அங்கு ரஷிய ராணுவத்துக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள்.

இதனால் அந்நகரங்களை ரஷிய படையால் எளிதாக கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து 2 நகரங்களிலும் சில நாட்களாகவே தாக்குதல் அதி பயங்கரமாக இருந்து வருகிறது. அங்கு வான் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்… மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை ஆறுதல், நம்பிக்கையை தருகிறது- திருமாவளவன் அறிக்கை

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »