Press "Enter" to skip to content

கட்சியை விட்டு நீக்கிய நிலையில் மீண்டும் சசிகலாவை சந்தித்த ஓ.பி.எஸ். சகோதரர்

கட்சியில் இருந்து தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓ.ராஜா கருத்து தெரிவித்தார்.

மதுரை:

அ.தி.மு.க.வை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சசிகலா திடீரென தென்மாவட்டங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்கி இருந்தபோது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அங்கு வந்தார். அவர் சசிகலாவை சந்தித்து பேசினார். இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்புஜி, கடலூர் நகர புரட்சித்தலைவர் பேரவை செயலாளர் சேதுபதி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளுடன் நீக்கப்பட்ட இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.

கட்சியில் இருந்து தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓ.ராஜா கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் பார்வை செய்து விட்டு சென்னை செல்வதற்காக தேர் மூலம் சசிகலா நேற்று இரவு மதுரை வந்தார்.

அவரை மதுரை கப்பலூர் டோல் கேட் பகுதியில் வைத்து மீண்டும் ஓ.ராஜா சந்தித்தார். அப்போது சசிகலாவை தேனி மாவட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் மற்றொரு நாளில் வருகிறேன் என சசிகலா கூறி சென்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »