Press "Enter" to skip to content

மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியால் உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் 878 பேர் மீட்பு

மத்திய மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களை மீட்பதற்காக உக்ரைனில் ஒரு சில இடங்களில் போர் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மாணவர்கள் அனைவரும் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சென்னை:

ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால் அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்கி படித்து வந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளும் சிக்கிக்கொண்டனர். முதலில் 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கிக்கொண்டதாக தெரியவந்தது. பின்னர் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் 2,300 பேர் மட்டுமே அங்கு படித்து வந்தது உறுதியானது.

உக்ரைனில் படித்து வரும் தமிழக மாணவர்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. போர் தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சிக்கிக்கொண்ட மாணவர்கள் பெயர், பல்கலைக்கழக விவரங்கள் போன்றவை பெறப்பட்டன.

அதன் அடிப்படையில் மாணவர்களை மீட்கும் பணி இந்திய தூதரகம் வழியாக வேகப்படுத்தப்பட்டன. உக்ரைன் எல்லை நாடுகள் வழியாக மாணவர்கள் பாதுகாப்பாக அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த ஒருவாரமாக போலந்து, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளின் எல்லை பகுதிகளுக்கு பாது காப்பாக வந்த மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

உக்ரைனின் தலைநகரான கிவ், கார்கிவ் மற்றும் சுமி போன்ற நகரங்களில் இன்னும் தமிழக மாணவர்கள் சிலர் சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. அவர்களை மீட்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது.

இதற்கிடையில் தமிழக மாணவர்களை மீட்க எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடம்பெற்றனர். இந்த குழுவினர் நேற்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்கள்.

போர்முனையில் சிக்கிக்கொண்ட எஞ்சிய தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் உக்ரைன் எல்லை பகுதியில் இருந்து மாணவர்களை தமிழகத்துக்கு அழைத்துவர உதவி செய்வதற்காக தங்களையும் அங்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், மாணவர்களை மீட்பதற்காக உக்ரைனில் ஒரு சில இடங்களில் போர் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மாணவர்கள் அனைவரும் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதனால் தாங்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர் வழங்கினார். இதையடுத்து தமிழக மீட்பு குழு எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக மாணவர்களை மீட்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ஜெசிந்தா லாசரஸ் கூறியதாவது:-

டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து தமிழக மாணவர்களின் நிலை, அவர்களை உடனடியாக மீட்பது குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 878 மாணவ-மாணவிகள் சென்னை திரும்பியுள்ளனர். சுமி பகுதியில் 68 தமிழக மாணவர்கள் மட்டும் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. இது தவிர கார்கிவ் நகரத்திலும் மாணவர்கள் சிலர் உள்ளனர். மொத்தம் 250 மாணவர்கள் போர் பகுதியில் இருந்து இன்னும் மீட்க வேண்டிய நிலை உள்ளது.

எல்லை பகுதியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் விமானத்திற்காக காத்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் அனைவரும் தாயகம் திரும்புவார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »