Press "Enter" to skip to content

5 மாநில தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

மத்திய அரசை பொறுத்தவரை 5 மாநில தேர்தல் அரை இறுதி ஆட்டம் போன்று கருதப்படுகின்றது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுவிட்டது.

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாப்பில் 117 தொகுதிகள், உத்தரகாண்டில் 70 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆண்களை விட பெண்கள் இந்த தடவை சற்று அதிகமாக வாக்களித்து இருப்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆண்கள் 71.99 சதவீதமும், பெண்கள் 71.91 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 65.37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண் வாக்காளர்கள் 62.06 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.20 சதவீதமும் வாக்களித்துள்ளனர். கோவாவில் மொத்தம் 79.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண்கள் வாக்கு 78.19 சதவீதமாகவும், பெண்கள் வாக்கு 80.96 சதவீதமாகவும் உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பதிவாகி இருக்கும் 88.06 சதவீத வாக்குகளில் 87.02 சதவீத வாக்குகள் ஆண்களும், 89.94 சதவீத வாக்குகள் பெண்களும் போட்டுள்ளனர். உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் ஆண்களை விட பெண்களே அதிக வாக்குகளை பதிவிட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்திலும் கணிசமான அளவுக்கு பெண்கள் வாக்குச்சாவடிக்கு வந்தனர். இதனால் 5 மாநில தேர்தல்களில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசை பொறுத்தவரை இந்த 5 மாநில தேர்தல் அரை இறுதி ஆட்டம் போன்று கருதப்படுகின்றது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி வருகிற ஜூலை மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு, மாநில கட்சிகளை விட அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

இந்தநிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் எந்த ஒரு கட்சியும் 2-வது முறையாக ஆட்சி அமைத்ததாக கடந்த 37 ஆண்டுகளில் வரலாறு இல்லை.

2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224, பகுஜன் சமாஜ் கட்சி 80, பா.ஜ.க. 47, காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. 2017-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 312, சமாஜ்வாடி 47, பகுஜன் சமாஜ் 19, காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

பாரதிய ஜனதா கட்சி இந்த மாநிலத்தில் தொடர்ந்து செல்வாக்குடன் இருப்பது கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுமார் 40 சதவீத வாக்குகளை பா.ஜ.க. பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அந்த வாக்கு சதவீதம் 50 சதவீதமாக உயர்ந்தது.

இந்துத்துவா கொள்கைகளை முன்நிறுத்துவதால் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. பொதுவாக உத்தரபிரதேச தேர்தல் வரலாற்றை ஆய்வு செய்தால் தேர்தல் அறிவிப்புகளும், ஜாதி வாக்குகளும், கூட்டணியும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதாக இருக்கும்.

இவை அனைத்திலும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமான நிலையே உள்ளது. நடுத்தர, ஏழை மக்களுக்கு நிறைய இலவச திட்டங்களை பாரதிய ஜனதா அறிவித்து தன் வசப்படுத்தி உள்ளது.

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதால் பாரதிய ஜனதாவுக்கு மிக எளிதான வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கருத்து கணிப்புகளும் இதையே சொல்லி வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் சுமார் 15 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 86 தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அதிகம் உள்ளனர். இந்த தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி அதிக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதிலும் பல இடங்களில் மாயாவதி செல்வாக்கு இழந்து இருப்பதால் அதுவும் பாரதிய ஜனதாவுக்கு லாபமாக மாறி உள்ளது.

ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறப்பட்டு இருந்தது. எல்லா கருத்து கணிப்புகளுமே பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தாலும் அது 2017-ம் ஆண்டு பெற்ற இடங்களை விட குறைவான இடங்களையே பெறும் என்று கூறி இருந்தன.

இதனால் தேர்தல் களத்தில் பா.ஜனதா தனது வியூகத்தை சற்று மாற்றியது. சமாஜ்வாடி வெற்றி பெற்றால் மீண்டும் உத்தரபிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று முழங்கினார்கள். அது மட்டுமின்றி மத்திய அரசும், மாநில அரசும் பா.ஜ.க.வாக இருந்தால் அது இரட்டை என்ஜின் அரசாக இருக்கும் என்று தெருவுக்கு தெரு கோ‌ஷமிட்டனர்.

ஆனால் இதை தகர்க்கும் வகையில் பா.ஜ.க.வின் தோல்விகளை பொதுக் கூட்டங்களில் அகிலேஷ் யாதவ் பட்டியலிட்டார். இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு சில இடங்களில் சறுக்கல் ஏற்பட்டு இருப்பது மறுக்க முடியாதது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சராசரியாக 240 முதல் 250 இடங்களில்தான் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை பா.ஜனதாவுக்கு 60 முதல் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். நாளை தெளிவான நிலை தெரிந்து விடும்.

117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 2.2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, மற்றவர்கள் 15, பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.கவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்து இருந்ததை காண முடிந்தது.

ஆனால் பா.ஜ.க.வை விட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசின் செல்வாக்குதான் அதிகம் உள்ளது. ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சித்துவின் வருகையால் பஞ்சாப் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனால் பஞ்சாபில் பா.ஜ.க.வின் முயற்சிகள் எடுபடாமல் போனது. பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு என்ற கோ‌ஷத்தை பஞ்சாபில் முன்வைத்தனர். அதுவும் எடுபடவில்லை. அதே போன்றுதான் காங்கிரஸ் கட்சி தலித் இனத்தவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி உள்ள போதிலும் மக்களை கவர இயலவில்லை.

இவர்களுக்கு இடையே விளக்குமாறுடன் வந்த ஆம் ஆத்மி கட்சி மாதந்தோறும் பெண்களுக்கு உதவித்தொகை தருவதாக அறிவித்துள்ளது. இது பஞ்சாப் பெண்களை ஆம் ஆத்மி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால் பஞ்சாபில் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதை ஓட்டுப்பதிவு முடிந்தவுடனேயே பா.ஜ.க. வினர் சொல்லிவிட்டனர்.

ஆகையால் பஞ்சாபை கைப்பற்ற கெஜ்ரிவாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் உறுதிபடுத்தி உள்ளன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் 6 கருத்து கணிப்புகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

காங்கிரசின் வீழ்ச்சி ஆம் ஆத்மிக்கு லாபமாக மாறி உள்ளது. அகாலிதளம் கூட்டணி, பா.ஜனதா கூட்டணிகளாலும் ஆம் ஆத்மி ஆதிக்கத்தை பஞ்சாப்பில் தடுத்து நிறுத்த இயலவில்லை என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

எனவே ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மையை விட கூடுதலாக எவ்வளவு கிடைக்கும் என்பது ஓட்டு எண்ணும் போதுதான் தெரியும்.

40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 11.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17, பாரதிய ஜனதா 13 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 28.4 சதவீத வாக்குகளும், பாரதிய ஜனதா 32.5 சதவீத வாக்குகளும் பெற்று இருந்தன. எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.

பா.ஜ.க. ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கோவா மாநிலத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலின் போது வேலை தருவதாக சொல்லிதான் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

ஆனால் வேலைவாய்ப்பை அவர்களால் உருவாக்க இயலவில்லை. இதையே திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் பிரசார யுக்தியாக கையில் எடுத்துள்ளது.

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 தருவோம்’’ என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். இதை பார்த்ததும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் நாங்கள் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 தருகிறோம் என்று அறிவித்தார்.

இப்படி திரிணாமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் அங்கு காலூன்ற தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. வாக்குகள் பிரிவதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இதை உறுதிபடுத்துவதாகவே உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவை பெறுபவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை கோவா அரசியல் களத்தில் நிலவுகிறது. இதனால் நேற்றும், இன்றும் திரிணாமுல் காங்கிரசை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் 82.4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 56, காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. காங்கிரசுக்கு 33.5 சதவீதம், பாரதிய ஜனதாவுக்கு 46.5 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருந்தன.

இந்த தடவையும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக மோதி வருகின்றன. ஆனால் ஆம் ஆத்மி இடையில் புகுந்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி பிரிக்கும் வாக்குகள் காங்கிரசை பாதிக்குமா, அல்லது பாரதிய ஜனதாவை பாதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 24 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பை தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. இதேபோன்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் அறிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சி ஒருபடி மேலே சென்று காவல் துறையில் 40 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அங்கு பிரசாரத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி, விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து பேசினார். மேலும் பெண்களுக்கு குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனால் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பா.ஜ.க. கூறி வருகிறது. ஆனால் காங்கிரசின் பிரசாரம் காரணமாக உத்தரகாண்ட் தேர்தல் முடிவு யாருக்கும் உறுதியான, சாதகமான நிலையில் இல்லை என்பதே உண்மையாகும்.

நேற்று வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா நூல் இழை வித்தியாசத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஓரிரு இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரசும் நெருங்கி வருவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த மாநிலத்திலும் இழுபறி ஏற்படலாம் என்று சொல்கிறார்கள்.

60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 20.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 28, பா.ஜனதா 21 இடங்களில் வெற்றி பெற்றன. என்றாலும் காங்கிரசுக்கு 35.1 சதவீதம் வாக்குகளே கிடைத்தன. பாரதிய ஜனதாவுக்கு 36.3 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருந்தன.

இதையடுத்து காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் விலகியதால் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. தற்போது மீண்டும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் மோதல் நிலவுகிறது. மணிப்பூர் மாநில மக்களுக்கு அவர்களின் உரிமையை காக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பா.ஜனதா உறுதி அளித்து ஓட்டு வேட்டையாடியது.

அதுமட்டுமின்றி கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவசமாக மின்சார ஸ்கூட்டர், பெண்களுக்கு கூடுதலாக இலவசமாக 2 சமையல் கியாஸ் சிலிண்டர் தருவோம் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு காங்கிரசை நிலைகுலைய செய்துவிட்டது. பதிலுக்கு காங்கிரஸ் கட்சி, ‘‘பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை’’ தருவோம் என்று அறிவித்துள்ளது. அதோடு ஆயுத சட்டத்தை திரும்பப் பெறுவோம் என்றும் உறுதி அளித்துள்ளது.

நாகா பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் பிரசாரம் செய்துள்ளன. இதனால் இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது.

5 மாநிலங்களில் அதிகமான வாக்குகள் பதிவானது மணிப்பூர் மாநிலத்தில்தான். இதனால் இந்த மாநில தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

மணிப்பூர் ஓட்டுப்பதிவுக்கு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் பா.ஜனதாவின் கை ஓங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு மீண்டும் தாமரை மலரும் என்று பா.ஜனதா தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கையை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்து இருக்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »