Press "Enter" to skip to content

குஜராத்தில் பிரதமர் மோடி நாளை ரோடு ஷோ- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிலும் பங்கேற்பு

2 நாள் சுற்றுப்பயணமாக நாளை குஜராத் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

ஆமதாபாத்:

குஜராத்தில் முதல்-மந்திரி பூபேந்திரபாய் படேல் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை (11-ந் தேதி) குஜராத் செல்கிறார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

நாளை காலை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஆமதாபாத் விமான நிலையம் செல்கிறார். அங்கு அவருக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

அங்கிருந்து மோடி ரோடு ஷோவாக சென்று பொதுமக்களை சந்திக்கிறார். விமான நிலையத்தில் இருந்து பாரதிய ஜனதா மாநில தலைமை அலுவலகம் வரை அவர் ரோடு ஷோ நடத்துகிறார்.

இதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பார்கள் என பாரதிய ஜனதா மாநில தலைவர் சி.ஆர். பாட்டீல் கூறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா தொண்டர்கள், மோடி ஆதரவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ரோடு ஷோ முடிவில் பாரதிய ஜனதா அலுவலகத்துக்கு செல்லும் மோடி, அங்கு கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

மாலையில் ஆமதாபாத் ஜிஎம்டிசி மைதானத்தில் மகா பஞ்சாயத்து மாநாடு நடக்கிறது. மாநாட்டில் மாவட்ட, தாலுகா, வட்ட அளவில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் மோடி பங்கேற்று அவர்களை உற்சாகப்படுத்தி பேசுகிறார்.

மறுநாள் (12-ந் தேதி) காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

பின்னர் ஆமதாபாத்தில் கேள் மஹாகும்ப் எனப்படும் மாபெரும் விளையாட்டு விழாவை தொடங்கி வைக்கிறார். மாநிலம் முழுவதும் 500 இடங்களில் இந்த விளையாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள்.

5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் பிரதமர் மோடி உடனடியாக நாளை குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »