Press "Enter" to skip to content

சென்னை மாநகராட்சியின் புதிய வரவு செலவுத் திட்டம் ரூ.5 ஆயிரம் கோடியில் தயாராகிறது

சென்னை மாநகராட்சி வரவு செலவுத் திட்டத்தில் நமக்கு நாமே திட்டம், சிங்கார சென்னை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு புதிய மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளனர்.

6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டதன் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வாகி சென்னை மாநகரத்தின் வளர்ச்சி பணிகளை செய்வதற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 5 வருடமாக சிறப்பு அதிகாரி வரவு செலவுத் திட்டம் தயாரித்து வழங்கினார். இந்த வருடம் புதிய மேயர் தலைமையில் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது. மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை.

இதற்கிடையில் தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் வருகிற 18-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பிறகே, சென்னை மாநகராட்சியின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்.

தமிழக அரசின் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறுகின்ற திட்டங்கள், நிதி ஒதுக்கீடு சார்ந்து சென்னை மாநகராட்சியின் வரவு செலவுத் திட்டம் இறுதி வடிவம் பெறும். அந்த வகையில் தமிழக அரசின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்கொள்ளும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி வரவு செலவுத் திட்டம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரையிலான வரவு-செலவை உள்ளடக்கியதாக அமைகிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் நமக்கு நாமே திட்டம், சிங்கார சென்னை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ரூ.5 ஆயிரம் கோடியில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்த பின்னர் சென்னை மாநகராட்சி வரவு செலவுத் திட்டம் தாக்கல் நடைபெறும்.

தற்போது தேர்தல் நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருப்பதால் அடுத்த மாதம் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் வரவு செலவுத் திட்டம் தாக்கல் கூட்டம் நடைபெறும். இதில் தொலைநோக்கு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »