Press "Enter" to skip to content

ரசாயன ஆயுத தாக்குதலா?: ரஷிய குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் மறுப்பு

நான் இரண்டு குழந்தைகளின் தந்தை, எனது நாட்டில் ரசாயன ஆயுதங்கள் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான போரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ரஷியாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ரஷியா மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை பார்த்தாலே போதும்.

அமைதியான ரஷியா மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். எங்களுக்காக வேறு என்ன தயார் செய்துள்ளீர்கள்? ரசாயன ஆயுதங்களால் எங்கு தாக்குகிறார்கள்? என்று கூறுங்கள்.

எங்கள் மீது குற்றம் சாட்டுவது என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. நான் ஒரு நாட்டின் அதிபர். 2 குழந்தைகளின் தந்தை. எங்கள் நாட்டில் ரசாயன ஆயுதம் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்கள் தயார் படுத்தப்படவில்லை. இது உலகுக்கே தெரியும். ரஷியா எங்கள் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தினால் மேலும் பொருளாதாரத்தடைகளுக்கு உள்ளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷியா குற்றம்சாட்டி அது தொடர்பாக விசாரிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »