Press "Enter" to skip to content

சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?- எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்:

சேலம் மாவட்ட அ.தி.மு.க. புறநகர் அலுவலகத்தில் இன்று காலையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றபோது அவருடன் துறை செயலாளர்கள் செல்லவில்லை, துறை அமைச்சர்கள் செல்லவில்லை. மு.க.ஸ்டாலின் குடும்பமே துபாய்க்கு சென்றுள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அவர் அங்கு செல்லவில்லை, துபாய்க்கு சென்றது அவருடைய தனிப்பட்ட காரணத்துக்காக தான் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக புதிய தொழில் தொடங்குவதற்காக அங்கு சென்றுள்ளதாக மக்கள் பேசிக்கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது.

அதுமட்டுமல்ல சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கப்பட்ட நாள் 1-10-2021. முடிவடைகிற நாள் 31-03-2022. கண்காட்சி முடிவடைகிற தருவாயில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் சார்பாக அங்கு கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இன்னும் 4 நாட்களில் கண்காட்சி முடியவடைய போகிறது. 1-10-2021-ல் தொடங்கி வைத்திருந்தால் பரவாயில்லை. ஆகவே இதை ஒரு காரணமாக வைத்து துபாய் செல்வதற்கு பயன்படுத்தி இருக்கிறார்.

நான் வெளிநாடு சென்றபோது சாதாரண விமானத்தில் தான் பயணம் செய்தேன். என்னுடன் அந்தந்த துறைகளுடைய அமைச்சர்கள், செயலாளர்கள் வந்தார்கள்.

இதை அமைச்சர்கள் சுற்றுலா என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். வேண்டும் என்றே திட்டமிட்டு எங்கள் மீது அவதூறு பரப்பினார்.

நாங்கள் உண்மையிலேயே பல திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்றோம். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோட்டில் ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா தொடங்கினோம். மின்சார வாகன கொள்கை 2019 உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி அருகில் மின்சார வாகனம் தயாரிப்பு பூங்கா, ஓசூரில் எனர்ஜி நிறுவனம், போச்சம்பள்ளியில் ஓலா நிறுவனம் கொண்டு வந்தோம். அங்கு உற்பத்தி தொடங்கி இருக்கிறது. ஹேண்டாய் எலெக்ரிக் தேர் 2019, திட்டத்தை நான் தலைமை செயலகத்தில் வைத்து தொடங்கி வைத்தேன். இதேபோல் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவினோம்.

2019-ல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையில் நடத்தினேன். அதில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. டி.எல்.எப். நிறுவனத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன்.

ஆனால் மறுபடியும் மு.க.ஸ்டாலின் அங்கு அடிக்கல் நாட்டுகிறார். ஸ்டிக்கர் ஓட்டுவது தான் இவருடைய வேலை. சர்வதேச வர்த்தக கண்காட்சி தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தபோது அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை தான் அதில் இடம் பெற்றிருக்கிறது. அவர் ஆட்சி அமைத்து 10 மாதத்தில் எந்த திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை. எந்த புதிய தொழிற்சாலையும் கொண்டு வந்து நிறைவேற்றி பணியை தொடங்கவில்லை.

நாங்கள் அரசு பணத்தை வீணடிக்கவில்லை. ஆகவே இவர்கள் குடும்ப சுற்றுலா போவதற்காக துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைக்கும் போர்வையில் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதன்மை மாநிலம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டது. தற்போது அ.தி.மு.க.வில் 25 மாவட்டங்களுக்கான அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. உட்கட்சித் தேர்தல் முடிந்த பிறகு நானும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி தமிழக அரசை கண்டித்து போராட்டம் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?

பதில்: அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தலைமைக் கழகமும் இணைந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை நானும் ஓ.பி.எஸ்.சும் இணைந்து அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அதற்கு வாய்ப்பில்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது.

கே: சசிகலா குறித்து ஓ.பி.எஸ். கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: அரசியல் வேறு. தனிப்பட்ட முறை என்பது வேறு. சசிகலாவுடன் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. அதனடிப்படையில் ஓபிஎஸ் பேசியுள்ளார். இப்போது ஸ்டாலினுடன் எங்களுக்கு அரசியல் ரீதியாகவே பிரச்சினை உள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துத்தான்.

கே: தொழிலாளர்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதே?

ப: மூச்சுக்கு 300 தடவை ஜனநாயகத்தை பேசும் தி.மு.க. தற்போது இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசிவிட்டு, இப்போது போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

8 வழிச்சாலையை எக்ஸ்பிரஸ் வே என பெயர் மாற்றி கொண்டு வர திமுக முயற்சித்து வருகிறது. அத்திட்டம் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு உள்ளது.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகா நடந்து கொள்ள வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி நதியை நம்பியே தமிழ்நாட்டு மக்களும் விவசாயிகளும் உள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மேகதாது அணை பிரச்சினையில் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »