Press "Enter" to skip to content

எனது ஆட்சி காலத்தை உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற திட்டமிட்டு செயல்படுகிறோம்- மு.க.ஸ்டாலின்

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்ட மளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை நடந்தது.

விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு வளர்ச்சிக்குக் காரணமானவர்களை உருவாக்கிய இடம்தான் இந்தச் சென்னைப் பல்கலைக்கழகம். அத்தகைய திறமைசாலிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று நான் மனதார, உளமாற வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் கல்வியில், சிந்தனையில், அறிவாற்றலில் மேன்மை பெற்றவர்களாக வளர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தமிழக அரசின் மிகமிக முக்கியமான இலக்காக இது அமைந்திருக்கிறது. அதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

தமிழக மக்களால் முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கக்கூடிய நான் அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கிய திட்டம்தான் இந்த அற்புதமான திட்டம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றவே இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘வேலைகள் இருக்கின்றன, ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை’ என்று சொல்கிறார்கள்.

அப்படியானால் இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் என்று நினைக்கிறது.

மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள், கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித்தொகைகளின் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதில் பெறும் வகையில், ‘நான் முதல்வன்’ என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது.

வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தி தனியார் நிறுவனங்களின் மூலமாக பயிற்சிகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஏழை எளிய, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களால் அது இயலாது. எனவே அந்த வாய்ப்பை அரசுதான் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

அந்தக் கடமையைப் பல்வேறு வகையில் செயல்படுத்துவதற்காகத்தான் ஏராளமான திட்டங்களை நமது அரசு தீட்டி இருக்கிறது.

வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக்கூடாது. தகுதியான இளைஞர்கள் வேலைக்குக் கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும் சொல்லக்கூடாது. அத்தகைய நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க நினைக்கிறது. அதற்காகத் தான் பல திட்டங்களைத் தீட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் திட்டங்களைத் தீட்டிட வேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியில் சேர்ந்து, படிப்பு முடியும் வரை, மாணவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதம் ரூபாய் 1000 செலுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம், கல்வி உதவித்தொகை, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை, நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும், மாணவர்களுடைய நலன்கருதி தொடர்ந்து வழங்கி வரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது உங்கள் அரசு, இது மக்களுக்கான அரசு, இது மாணவர்களுக்கான அரசு என்று சொல்லிக்கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

சென்னைப் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பான முயற்சிகளை எடுத்து வருவதை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

முத்தமிழ் அறிஞ்சர் கலைஞ்சர் தலைமையில் 2006ம் ஆண்டில் திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்திற்கான விதை சென்னை பல்கலைக் கழகத்தில் இடப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு இப்போது மீண்டும் புத்துயிர் ஊட்டப்பட்டிருக்கிறது.

திருநங்கைகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி கொண்டிருக்கக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், வரும் கல்வியாண்டு முதல், இளநிலை மற்றும் முதுநிலையில் இலவசமான படிப்பு வழங்கப்படும் என்கிற திட்டம், எல்லாவற்றையும் விட எனக்கு உண்மையில் மனமார்ந்த மகிழ்வைத் தந்து கொண்டிருக்கிறது.

உங்களது பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் உண்மையான சொத்து, இந்தக் கல்வி எனும் சொத்துதான். இதைத்தான் யாரிடமிருந்தும் யாரும் பிரிக்க முடியாது.

ஆகவேதான் பெருந்தலைவர் காமராசர் காலம், பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்பதைப் போல முத்தமிழறிஞர் கலைஞரின் காலம் கல்லூரியின் காலம் பொற்காலம் என்பதைப் போல எனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர்கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருந்து கொண்டிருக்கக்கூடிய ஆளுநருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உயர்கல்வி நிறுவன வரிசையில் சென்னைப் பல்கலைக்கழகம் முதன்மையான இடத்திற்கு வருவதற்கு எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 545 மாணவ-மாணவிகளும், தொலைதூர கல்வியில் படிக்கும் 22 ஆயிரத்து 186 மாணவ-மாணவிகளும் பட்டம் பெற்றுள்ளனர்.

இவர்களில் 931 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

மேலும் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆராய்ச்சி படிப்புக்காக மருத்துவர் பட்டம் பெற்றனர். சண்முகம், மகேஸ்வரி, ஆனந்தகுமார், பாஸ்கர், சீனிவாசன், லீலாவதி ஆகிய 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மருத்துவர் பட்டம் பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் ஆராய்ச்சி படிப்புக்காக இன்று மருத்துவர் பட்டம் பெற்றார். மொத்தம் 731 பேர் ஆராய்ச்சி படிப்புக்காக மருத்துவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில் 297 பேர் ஆண்கள், 434 பேர் பெண்கள். பாடவாரியாக 100 பேர் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரியில் படிக்கும் மாணவி சமீராபானு 7 பதக்கங்களை பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஆன்ட்ரூஸ் 6 பதக்கங்களை பெற்றார்.

கவுரிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி மாணவி ரேவதி 5 பதக்கங்களை பெற்றார். மேலும் மற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர் விஸ்வநாத், மாணவி முகமது நதிஷா தஸ்லிம் ஆகியோர் தலா 5 பதக்கங்களை பெற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »