Press "Enter" to skip to content

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட அவைக்கு வரவே இல்லை என வருகைபதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்ததால் அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தியா திரும்பியதும் மாநிலங்களவை உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழில் பதவியேற்றுக் கொண்ட அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 13 நாட்கள் நடைபெற்ற இந்தக்கூட்டத்தொடரில் கலந்துகொண்ட உறுப்பினர்களின் வருகைப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், கூட்டத்தொடரில் பிடி.உஷா 13 நாட்களும், வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கலந்துகொண்டுள்ளனர். இதில் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் வருகைப்பதிவு பூஜ்யம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »