Press "Enter" to skip to content

நம் பிள்ளைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுப்போம் – கார்த்தி

‘நம் பிள்ளைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுப்போம்’ என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக உழவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, சிவக்குமார், பொன்வண்ணன், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும்போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. இவர்களை அந்த ஊரில் உள்ளவர்கள் கூட மதிப்பார்களா? என்று தெரியாது. அப்படிபட்டவர்களை அழைத்து வந்து நமது குழந்தைகளுக்கு, இவர்கள் தான் நமது கதாநாயகர்கள், இவர்கள் தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் உழவர் விருதுகளை தொடங்கினோம்.

நம்முடைய குழந்தைகளுக்கு சாப்பாட்டை வீண் செய்யாதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? இதற்கு முன்பு சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று குழந்தைகளைக் கேட்டால், சூப்பர் சந்தையில் இருந்து வருகிறது என்பார்கள். ஆனால், இன்று ஸ்விகி, சொமோட்டோவில் வாங்கியால் வரும் என்கிறார்கள். ஒரு தேரை எப்படி தயாரிக்கிறார்கள், ஐஸ்கிரீம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்கிறோம். ஆனால், உணவை எப்படி தயாரிக்கிறார்கள்? என்று சொல்லிக் கொடுக்கிறோமா? நான் என் மகளுக்கு நாள் முழுவதும் விவசாய நிலத்தைச் சுற்றி காண்பித்தேன்.

பல பள்ளிகள் இன்று அழைத்துச் செல்கிறது. சில பள்ளிகளில் விவசாயத்திற்கென ஒரு வகுப்பை தனியாகவே ஒதுக்குகிறார்கள். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலா கட்டாயமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பல திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வருவோம். இந்நிலையில், நீரும் நாமும் என்பது எனக்குப் பிடித்த விஷயம். இதை நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் இதை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »