Press "Enter" to skip to content

இயக்குநர் பிரியதர்ஷனின் ‘அப்பத்தா’ படத்துடன் தொடங்கும் எஸ்சிஓ திரைப்பட விழா 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து மத்திய அரசு நடத்தும் எஸ்சிஓ திரைப்பட விழா நாளை தொடங்குகிறது. இதில் முதல் படமாக பிரியதர்ஷனின் ‘அப்பத்தா’ படம் திரையிடப்பட உள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து மத்திய அரசு நடத்தும் திரைப்பட விழா நாளை மும்பையில் தொடங்குகிறது. எஸ்சிஓ எனப்படும் இந்த திரைப்பட விழாவானது ஜனவரி 27-ம் தேதி தொடங்கி 31 வரை நடக்கிறது. நாளைத் தொடங்கும் இந்த திரைப்பட விழாவில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி நடித்த தமிழ்படமான ‘அப்பத்தா’ திரையிடப்பட உள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் நடிகை ஊர்வசியின் 700-வது படமாகும்.

இந்த விழாவைத் தொடங்கி வைத்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “ பிரியதர்ஷனின் அப்பத்தா திரைப்படத்தின் முதல் காட்சியுடன் விழாவைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அன்பையும், நமது செல்லப்பிராணிகளுடனான பிணைப்பைக் கூறுகின்ற மனதைத் தொடுகின்ற கதை. எஸ்சிஓ திரைப்பட விழா ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அழகியல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் திரையிடப்பட உள்ளன’’ என்றார்.

இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “இந்த மதிப்புமிக்க நிகழ்வில் ‘அப்பத்தா’ தொடக்கப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்களுக்குப் பெருமை. இந்த எளிய மற்றும் அழகான கதையை என்னிடம் கொண்டு வந்ததற்காக எனது தயாரிப்பாளர்களான ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஊர்வசி போன்ற ஒரு அற்புதமான திறமையாளருடன் அவரது மைல்கல்லான 700 வது படத்தில் பணிபுரிவதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ‘அப்பத்தா’வித்தியாசமானது. பார்வையாளர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »