Press "Enter" to skip to content

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படப்பிடிப்பு தொடக்கம் 

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கும் ‘வடக்கன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. புது முகங்கள் நடிக்கும் இப்படத்தை பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி திரைப்படம்ஸ் தயாரிப்பில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகும் படம் ‘வடக்கன்’. ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி ‘வடக்கன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பாஸ்கர் சக்தி கூறுகையில், “எழுத்தாளனாக எனது பணியை துவங்கினேன். பின்பு பத்திரிகையாளனாக, அதன் பிறகு மிகச் சிறந்த தொலைக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக, திரைப்படங்களின் வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். தற்போது முதன் முறையாக ஒரு இயக்குநராக ‘வடக்கன்’ மூலமாக எனது திரைப் பயணத்தை தொடர்கிறேன்.

எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்தப் படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இருபது வருடங்களாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்தக் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியான வைரமாலா நடிக்கிறார். பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு அவர்.

இந்தக் காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தை இப்படம் பேசுகிறது. படம் சிறப்பாக உருவாகி மிகுந்த வரவேற்பை பெறும் என்று கதையின் மீது நம்பிக்கை கொன்டு இந்தப் படத்தை துவங்கியுள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜெ.ஜனனி இசையமைக்க, ரமேஷ் வைத்யா இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். கலை இயக்குநராக காத்து மற்றும் படத்தொகுப்பாளராக நாகூரான் பணியாற்றுகிறார்கள்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »