Press "Enter" to skip to content

‘கைதி’ இந்தி மறுதயாரிப்புகான ‘போலா’ 2 நாட்களில் வெறும் ரூ.18 கோடி மட்டுமே வசூல்

அஜய் தேவ்கன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ‘போலா’ இந்தி திரைப்படம் 2 நாட்களில் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் ‘போலா’ என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்துள்ளார். நடிகை அமலா பால், அஜய் தேவ்கனின் மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் நரேன் கதாபாத்திரத்தில் தபு நடித்துள்ளார். படத்திற்கு ‘கேஜிஎஃப்’ புகழ் ரவிபஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ரூ.100 கோடி வரவு செலவுத் திட்டத்தில் உருவாகியுள்ள இப்படம் முதல் நாள் (மார்ச் 30) ரூ.11.20 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளான நேற்று ரூ.7.40 கோடியை வசூலித்திருக்கிறது. மொத்தம் இரண்டு நாட்களில் ரூ.18.60 கோடியை வசூலித்துள்ள இப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் 35 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அது பிரதிபலிக்கவில்லை. இன்றும் நாளையும் விடுமுறை நாட்களாக இருப்பதால் வசூல் சற்று கூடலாம் என திரைப்படம் வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »