Press "Enter" to skip to content

‘‘அகழாய்வு மூலம் புதிய வரலாறு எழுதப்படும்” – நடிகர் சூர்யா

“அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும். அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்” என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, ஜோதிகா, தேவ் மற்றும் தியா ஆகியோர் குடும்பத்துடன் பார்வையிட்டனர். இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடனிருந்தார். இறுதியில் அங்குள்ள பதிவேட்டில் சிவக்குமார் குடும்பத்தினர் தங்களது எண்ணங்களை எழுதி பதிவிட்டனர்.

இந்நிலையில், கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருமிதம்! வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம். தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.. அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..குழந்தைகளுடன் அனைவரும் வருக!” என பதிவிட்டுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »