Press "Enter" to skip to content

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய விவேக் அக்னிஹோத்தரி – அவதூறு வழக்கு முடித்து வைப்பு

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான அவதூறு கருத்தை தெரிவித்ததற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்தரி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். இதையடுத்து, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள பீமா கொரேகானில் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதுக்கு உட்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளரான கெளதம் நவ்லாகாவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விடுதலை செய்தது.

கௌதம் நவ்லாகாவின் விடுதலைக்கு எதிராக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குர் விவேக் அக்னிஹோத்தரி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் நீதிபதிகள் பாரபட்சமாக செயல்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவதூறு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவேக் அக்னிஹோத்தரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு மூலம் மன்னிப்புக் கோரினார். ‘வருத்தத்தை எப்போதும் அபிடேஃபிட் மூலம் வெளிப்படுத்த முடியாது’ எனக் கூறி நேரில் ஆஜராகுமாறு விவேக் அக்னிஹோத்தரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று நேரில் ஆஜரான அவர் நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரியதையடுத்து நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »