Press "Enter" to skip to content

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ பட ரிலீஸுக்கான தடை நீக்கம்

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரயா பவானிசங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் விண்மீன் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இபடத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இடைக்கால தடையால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவன ஃபைவ்விண்மீன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தடையை நீக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்க கூடாது எனவும், பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், ருத்ரன் படத்தை திரையரங்கம், ஓடிடி, செயற்கைக்கோள் ஆகியவற்றில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி ருத்ரன் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »