Press "Enter" to skip to content

“பா.ரஞ்சித், மாரி செல்வராஜை காழ்ப்புணர்ச்சியில் தாக்குகின்றனர்” – இயக்குநர் அமீர்

சென்னை: “திரைப்படங்கள் தான் இந்த சமூகத்தை பண்படுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்படம் இல்லாவிட்டால் இந்த சமூகம் வேறுமாதிரியான சூழலை உருவாக்கிவிடும். பா.ரஞ்சித், மாரி செல்வராஜை காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குகின்றனர்” என்று இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.

இசக்கி கார்வணணன் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் பட விளம்பரம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குரும், நடிகருமான அமீர், “நாங்குநேரி சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இதெல்லாம் நிரந்தர தீர்வாகாது. நிரந்தர தீர்வை நோக்கி தமிழக அரசு நகர வேண்டும். மிக கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டும்போது பெற்றோர்களை தண்டிப்பது போல இதுபோன்ற வன்முறைகளில் பெற்றோர்களையும் உட்படுத்தினால் தான் நிரந்தர கிடைக்கும் என நான் நம்புகிறேன். குடிப்பெருமை, இனப்பெருமை, மொழிப்பெருமை, மதப்பெருமை எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன். நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருங்கள். எதையும் பெருமைபடுத்த வேண்டாம். யாரையும் சிறுமைபடுத்த வேண்டாம்” என்றார்.

“சாதிய படங்கள் மூலமாகத்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என கூறுகிறார்களே?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது அவர்களின் சுயலாபத்துக்காக சொல்கிறார்கள். திரைப்படங்கள்தான் இந்த சமூகத்தை பண்படுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்படம் இல்லாவிட்டால் இந்த சமூகம் வேறுமாதிரியான சூழலை உருவாக்கிவிடும். திரைப்படங்கள் மூலமாகத்தான் விவாத்தை ஏற்படுத்த முடியும். அந்த விவாதங்கள் தான் புதிய அரசியலை முன்னெடுக்கும்.

தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்த திமுக, அதிமுக கூட திரைப்படங்கள் மூலமாக வளர்ந்ததுதான். எனவே, அதனை குறை சொல்வது தவறு. கிராமங்களில் சாதி கட்டமைப்புடன் இருக்கிறது. நகரங்களில் கட்டமைப்பு இல்லையே தவிர, உள்ளுக்குள் அந்த உணர்வு இருக்கதான் செய்கிறது. பா.ரஞ்சித், மாரி செல்வராஜை காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குகின்றனர்” என்றார்.

மேலும் நீட் குறித்து அவர் பேசுகையில், “நீட் தேர்வுக்கு எதிரான போரை நீர்த்துவிடாமல் செய்வது தமிழர்களின் கடமை. நீட் தேர்வில் வெற்றிபெற்ற பெண்ணின் தந்தை கவர்னரிடம் சொல்லியிருக்கிறார். அந்த இடத்தில் ஆளுநர் தான்தோன்றி தனமாக நீட்டில் கையெழுத்திடமாட்டேன் என கூறியிருக்கிறார். தான் கற்றுகொண்ட சனாதனத்தை மக்கள் மீது திணிக்க வேண்டும் என நினைக்கிறார் அது கண்டிக்கத்தக்கது” என பேசினார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »