Press "Enter" to skip to content

‘மசாலா படங்கள் என்பது 3 மணி நேர போதை’ – இயக்குநர் தங்கர் பச்சான் காட்டம்

இயக்குநர் தங்கர் பச்சான் காட்டம்‘மசாலா படங்கள் என்பது 3 மணி நேர போதை’ இயக்குநர் சேரன் நடித்துள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’. இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ஸ்ரீபிரியங்கா, லால், எஸ். ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது: நான் கிராமத்தில் இருந்து 14 வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் பார்த்த சாதிய பாகுபாடு என் ஊரில் இப்போது இல்லை என்று சொல்ல முடியாது. இது தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. இது எப்படி இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கிறது? இதற்கு உயிர் கொடுப்பவர்கள் அதிகாரத்தை பெற விரும்புபவர்கள். அந்த அதிகாரத்தை சாதியை வைத்துதான் பெறுகிறார்கள்.

ஒரு திரைப்படம் செய்ய வேண்டிய வேலை, பிரிவினையை உண்டுபண்ணுவதல்ல. சமூகங்களை இணைப்பதைத்தான். எப்படி இணைப்பது? வெறும் வலிகளைச் சொல்லும் படங்களைத் தண்டி அதை இணைப்பது போன்ற காட்சி அமைப்புகள் கொண்ட ஒரு படம் கூட வரவில்லை. அடுத்தக் கட்டமாக அதுதான் வரவேண்டும். சாதிய அடுக்குகள் பற்றி நான் கிராமத்தில் இருந்தபோது பெரிதாகத் தெரியவில்லை. இப்போது நாங்குநேரி சம்பவத்தைக் கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

சாதிய பாகுபாடு, சாதி பிரிவினை, சாதி அடக்குமுறை, சாதி பெருமை, இதெல்லாம் குறைவது போல திரைப்படம் வரவேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கிற சேரனை, திரைப்படத்தைத் தொழிலாகக் கொண்டவராக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நானும் அவரும் இந்தக் கலைமூலமாக மக்களுக்காக ஏதாவது செய்து விடமுடியுமா என்று போராடிக் கொண்டிருக்கிறோம்.

பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மோசமாக இருந்தாலும் எப்படி மோசமாக இருக்கிறது என்று பார்ப்பதற்காகப் போகிறார்கள். நடிகரின் முகத்துக்காகப் போய் பார்க்கிறார்கள். மசாலா படங்களில் என்ன இருக்கிறது? அது 3 மணி நேர போதைதான். எப்படி ஒரு சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கிறோமோ, அதேதான் ஒரு நடிகரின் முகத்தைப் பார்த்து திரைப்படத்திற்கு செல்வதும். மக்கள் நினைத்தால் மட்டுமே திரைப்படம் மாறும். இவ்வாறு தங்கர் பச்சான் பேசினார். விழாவில், இயக்குநர்கள் அமீர், மாரி செல்வராஜ், நடிகர்கள் சரத்குமார், ரவிமரியா, பொன்வண்ணன், அருள்தாஸ் பேசினர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »