Press "Enter" to skip to content

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை சென்னைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றக் கோரி, அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டது. ஆனால், விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். 2021-ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருந்து வருகிறது.

வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே உள்ளனர். எனவே, வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »