Press "Enter" to skip to content

“எனக்கு ஒரு சொந்த தேர் கூட கிடையாது. ஆனால்…” – நான்காவது ஆம்புலன்ஸை வழங்கிய நடிகர் பாலா

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் பாலா தனது சொந்த செலவில் உதவூர்திகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 4-வது ஆம்புலன்ஸை உணர்வுகள் அறக்கட்டளையிடம் வழங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றை நேரில் பார்த்தேன். ஒருவர் படுகாயமடைந்திருந்தார். எல்லோரும் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். சம்பவ இடத்துக்கு தனியார், அரசு உதவூர்திகள் வந்தடைந்தன. தனியார் ஆம்புலன்ஸில்தான் ஏற்ற வேண்டும் என கூறி அங்கே சண்டை நடந்தது. காரணம் அவர்களுக்கு காசு கிடைக்கும் என்பதால் அந்தப் பிரச்சினை நடந்தது.

அப்போது தான் இலவச உதவூர்தி ஒன்றை வாங்க வேண்டும் என நினைத்தேன். அந்த சமயத்தில் என்னிடம் காசு இல்லை. காசை சேர்த்து அண்மையில் நமது இல்லம் என்ற அறக்கட்டளைக்கு அறந்தாங்கியில் ஒரு உதவூர்தி வாங்கி கொடுத்தேன். அடுத்து குன்றி என்ற மலைக்கிராமத்தில் நிறைய பேர் பாம்பு கடித்து இறந்து போகிறார்கள் என்றனர். உடனே அதற்காக உதவூர்தி ஒன்றை வாங்கி கொடுத்தேன்.

அதேபோல சோளக்கனை என்ற கிராமத்திலும் உதவூர்தி தேவைப்பட்டது. தற்போது 4-ஆவது ஆம்புலன்ஸை கொடுத்திருக்கிறேன். இந்த ஆம்புலன்ஸை பொறுத்தவரை காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மட்டுமல்லாமல், இறந்தவர்களை கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான ஐஸ்பாக்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸாக இதனை வாங்கி கொடுத்துள்ளேன்.

எனக்கு ஒரு சொந்த தேர் கூட கிடையாது. பலரும் உனக்கே இல்லாதபோது ஏன் உதவுகிறாய் என்றார்கள். அதெல்லாம் பெரிய விஷயமில்லை. நான் என்னால் முடிந்ததை உதவுகிறேன். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்தான் உதவி வருகிறேன். இதற்காக நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட பெறவில்லை. என் சேவையை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »