Press "Enter" to skip to content

‘Killers Of The Flower Moon’ Review: நேர்த்தியான திரை மொழியில் வரலாற்றுத் துயரமும், ‘மூவர்’ மீதான ஈர்ப்பும்!

1920-களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேசன் என்ற பகுதியில் செவ்விந்தியர்கள் மீது அமெரிக்கர்கள் நிகழ்த்திய தொடர் படுகொலைகளை அடிப்படையாகக் கொண்டு 2017-ஆம் ஆண்டு டேவி கிரான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தை தழுவி, அதே பெயரில் மூன்றரை மணி நேர திரைப்படமாக பெரிய திரையில் வடித்துள்ளார் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸெஸி.

எண்ணெய் வளம் கொழிக்கும் ஓசேஜ் கவுன்ட்டி செவ்விந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அமெரிக்கர்களின் கண்ணை உறுத்துகிறது. உலகின் அப்போதைய பெரும் பணக்காரர்களாக இருக்கும் செவ்விந்தியர்களிடம் நண்பர்களாகவும், வேலையாட்களாகவும் வந்து சேரும் அமெரிக்கர்கள் மெல்ல மெல்ல அவர்கள் மீது அதிகாரம் செலுத்த தொடங்குகின்றனர். இதனிடையே, ஆங்காங்கே சில மர்மக் கொலைகளும் நடந்து வருகின்றன. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ஓசேஜ் நேஷனுக்கு வருகிறார் ஏர்னஸ்ட் (லியோனார்டோ டிகாப்ரியோ). இயலிபிலேயே பெண்களின் மீதும் பணத்தின் மீதும் மோகம் கொண்ட ஏர்னஸ்ட், செவ்விந்திய பழங்குடிப் பெண்ணும், ஓசேஜ் நேசனின் செல்வாக்கு மிகுந்தவருமான மோலீயிடம் (லில்லி கிளாட்ஸ்டோன்) காதலில் விழுந்து அவரை திருமணமும் செய்து கொள்கிறார். இதனிடையே, மோலீயின் சகோதரிகள் மூவர் உள்ளிட்ட பலர் மர்ம நோயாலும், சில கொல்லப்பட்டும் இறந்து போகின்றனர். இந்த கொலைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் யார்? கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததா? – இதனை விரிவாகப் பேசுகிறது ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’.

50 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் பழம்பெரும் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸெஸியினிடம் இருந்து வந்துள்ள மற்றுமொரு ஆகச் சிறந்த படைப்பு. தனது தனித்துவமான படமாக்கல் முறை மூலமாக பல தசாப்தங்களாக உலக திரைப்படம் ரசிகர்களை ஈர்த்து வந்த 80 வயது ஸ்கார்ஸெஸி இம்முறை அதிகம் பேசப்படாத ஒரு வரலாற்று துயரத்தை கையில் எடுத்துக் கொண்டு அதனை மிக நேர்த்தியாக திரையில் காட்டியுள்ளார்.

ஓசேஜ் மக்களின் உலகத்தையும், அமெரிக்கர்களின் வஞ்சகத்தால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களயும் எந்தவித அவசரகதியும், ஜல்லியடிப்புகளும் இல்லாமல் மிக பொறுமையாகவும் அதேநேரம் ஆழமாகவும் பார்வையாளர்களுக்கு கடத்துகின்றனர் இயக்குநர் ஸ்கார்ஸெஸியும், திரைக்கதையாசிரியர் எரிக் ராத்தும். முதல் பாதி முழுவதும் ஓசேஜ் மக்கள், அவர்களின் வளங்கள், அவர்களை கொல்பவர்கள் யார் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பதை பற்றி பேசுகிறது. இரண்டாம் பாதி முழுவதும் கொலைகள் குறித்த விசாரணையும், எஃப்பிஐ-யின் (FBI) தோற்றம் குறித்தும் பேசப்படுகிறது (உண்மையில் இந்தக் கொலைகளை விசாரிக்க அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்டதுதான் FBI). இந்த வரலாற்று துயரத்தை அமெரிக்கர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய புத்தகங்களில் புறக்கணித்தே வந்திருக்கின்றனர்.

மார்ட்டின் ஸ்கார்ஸெஸியின் ஆஸ்தான நடிகர்கள் ராபர்ட் டி நீரோ மற்றும் லியோனார்டோ டிகாப்ரியா இருவரும் 1996-ஆம் ஆண்டு வெளியான ‘மார்வின்’ஸ் ரூம்’ என்ற படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். ஸ்கார்ஸெஸியின் படங்கள் என்று வந்துவிட்டால் டிகாப்ரியோ ஒரு ராட்சசனாக மாறிவிடுகிறார். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அப்பாவி இளைஞனாக வந்து, மெல்ல மெல்ல தனது மாமாவின் தாக்கத்தால் ஓசேஜ் நேஷனில் அதிகாரம் செலுத்தும் ஒருவனாக மாறும் கதாபாத்திரம். கடைசி வரை தான் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் தடுமாறும் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.

பார்த்தாலே எரிச்சல் வரும் கதாபாத்திரம் ராபர்ட் டி நீரோவுக்கு. படம் முழுக்க வில்லத்தனம் காட்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். படத்தில் இவர்களுக்கு அடுத்து குறிப்பிட்டு சொல்லவேண்டிய நடிப்பு லில்லி கிளாட்ஸ்டோன் உடையது. ஆரம்பத்தில் அழகுப் பதுமையாகவும், நீரிழிவு நோயின் தாக்கத்தால் இறுதியில் இருள் சூழ்ந்த முகத்துடன் வாடி வதங்கியும் படம் முழுக்க தனது ஆகச் சிறந்த நடிப்பால் கவர்கிறார். ஆக, இந்த மூவரின் பங்களிப்பு, திரைப்படத்தின் அடர்த்தியைக் கூட்டுகிறது எனலாம்.

படத்தில் ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால், படம் முழுக்க திடீர் திருப்பங்கள், அதிர்ச்சி மதிப்பீடுகள், கூஸ்பம்ப் காட்சிகள் வைக்கவேண்டிய இடங்கள் அநேகம் இருந்தும், அவற்றை எல்லாம் தவிர்த்ததுதான். ஆனால், படம் இறுதியில் அவற்றை விட ஒரு படி கூடுதலாகவே பார்ப்பவர்களுக்கு தாக்கம் தருகிறது. திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்ட ட்விஸ்ட்டுகளை வைக்கும் சூழலில், இப்படியான துணிச்சலான முயற்சி பாராட்டத்தக்கது.

ரோட்ரிகோ ப்ரீட்டோவின் ஒளிப்பதிவு படத்தின் கதாபாத்திரங்களையும், ஓசேஜ் கவுன்ட்டியின் பின்னணியையும் ஒரு புகழ்பெற்ற ஆயில் பெயின்ட்டிங் போல கண்முன் நிறுத்துகிறது. படம் முழுக்க பின்னணியில் வரும் ராபி ராபர்ட்ஸனின் பெப்பியான சவுண்ட் டிராக்குகள் திரைக்கதையின் போக்குக்கு சிறப்பாக உதவியுள்ளன.

படத்தின் குறையென்று பார்த்தால், அதன் நீளம்தான். என்னதான் திரைக்கதை சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருந்தாலும், 3 மணி நேரம் 26 நிமிடம் என்பது பல இடங்களில் நெளிய வைத்து விடுகிறது. குறிப்பாக, ஏர்னெஸ்ட்டின் கைதுக்கு பின்பு வரும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துவது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. க்ளைமாக்ஸை காட்சி வடிவில் காட்டாமல் ஒரு மேடை நிகழ்ச்சி வழியாக சொன்ன விதம் சிறப்பு. இங்கே ஸ்கார்ஸெஸியின் கேமியோ ஒன்றும் உண்டு.

வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு துயர சம்பவத்தை இடைச்செருகல்களும், சமரசங்களும் ஏதுமின்றி நிதானமான அதேநேரம் ஆழமான கதைச் சொல்லல் மூலம் திரைப்படமாக்கிய ஸ்கார்ஸெஸியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

[embedded content]

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »