Press "Enter" to skip to content

சொர்க்கம்: சென்னை தேவி திரையரங்கத்தில் வெளியான முதல் தமிழ்ப்படம்

டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி நடித்த சூப்பர் ஹிட் படம் ‘சொர்க்கம்’. கே.பாலாஜி, கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ, முத்துராமன், ஆர்.எஸ். மனோகர்,எம்.ஆர்.ஆர் வாசு, நாகேஷ், சச்சு என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம்.

கல்லூரி படிப்பை முடிக்கும் சங்கர், பணம்தான் முக்கியம் என்று நினைக்கிறார். ஒருவரின் உதவியால் அவர் வாழ்க்கையில் பணமும் செல்வாக்கும் கூடுகிறது.புகை, மது உள்ளிட்ட கெட்டப் பழக்கங்களும் சேர்ந்துகொள்கின்றன. மனைவி, குழந்தையை பிரிகிறார். வில்லனின் சதியில் சிக்கும் சங்கர், ஒரு கட்டத்தில், தவறுக்குத் துணை போவதை உணர்கிறார். ‘சொர்க்கம் என்பது நேர்மையான முன்னேற்றம்தான்’ என்பதைப் புரிந்து கொள்வதுதான் கதை.

சங்கராக நடித்திருந்தார் சிவாஜி. அவரும் கே.ஆர்.விஜயாவும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். ஆர்.எஸ்.மனோகருக்கு இரண்டு வேடம். ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர். இரண்டுக்கும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். எம்.ஆர்.ஆர்.வாசுவும் சச்சுவும் கணவன் மனைவி. இவர்கள் குழந்தைகளும் இவர்களாகவே இருப்பார்கள். அதன்படி எம்.ஆர்.ஆர் வாசுவுக்கு நான்கு வேடங்கள். சச்சுவுக்கு மூன்று வேடம்.

சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனம் எழுதியிருந்தார். எம்.எஸ். விஸ்வநாதன் இசை. ஆலங்குடி சோமு எழுதிய ‘பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்’ பாடல் வேற லெவல் பிரபலமடைந்தது. இந்தப் பாடலில் விஜயலலிதாவின் நடனமும் சிறப்பாக அமைந்தன. பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருந்தார்கள். அப்போது பல திரையரங்கம்களில் படம் முடிந்ததும் மீண்டும் ஒருமுறை இந்தப் பாடலை ரசிகர்களுக்காகத் திரையிடுவார்கள். இப்போது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் பாடல் அது.

‘சொல்லாதே யாரும் கேட்டால்’, ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் கோர்த்து வைத்திருந்தேன்’ ஆகிய பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

ஈஸ்ட்மென் கலரில் உருவான இந்தப் படத்தில், ஒரு காட்சியில் ‘ஜூலியஸ் சீஸர்’ நாடகம் இடம்பெறும். சீஸராக சிவாஜியும் புரூட்டஸாக பாலாஜியும் நடித்திருப்பார்கள். இந்தக் காட்சியில், சிவாஜியின் ஸ்டைலுக்காகவே படத்தை பல முறை பார்த்துள்ளனர், அந்த கால ரசிகர்கள்.

சென்னை தேவி திரையரங்கத்தில் வெளியான முதல்தமிழ்ப்படம் ‘சொர்க்கம்’தான். பின்னர், தேவி பாரடைஸ்திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. சிவாஜியின் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும் இதே தேதியில் தான்வெளியானது. இரண்டு படங்களும் ஒரே தீபாவளியன்று வெளியாகி நூறு நாளைக் கொண்டாடியது. 1970-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது இந்தப் படம்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »