Press "Enter" to skip to content

மகனை நினைத்து உருகிப் பாடிய டி.எம்.எஸ்! – பாகப்பிரிவினை

இயக்குநர் ஏ.பீம்சிங், சிவாஜி இணைந்த ‘பா’வரிசைப் படங்களில் ஒன்று ‘பாகப்பிரிவினை’. ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்தஇந்தப் படத்தில் சரோஜாதேவி, சிவாஜியின்மனைவியாக நடித்திருப்பார். எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம், சி.கே.சரஸ்வதி, நம்பியார், எம்.ஆர்.ராதாஆகியோரைச் சுற்றிதான் படம். கதை, வசனத்தை சோலைமலை எழுதியிருந்தார்.

ஒரு கையும் காலும் ஊனமான கன்னையன் (சிவாஜி), தந்தை சுந்தரலிங்கம் (எஸ்.வி.சுப்பையா) தாய் மீனாட்சி (எம்.வி.ராஜம்), பெரியப்பா வைத்தியலிங்கம் (டி.எஸ்.பாலையா), பெரியம்மா அகிலாண்டம் (சி.கே.சரஸ்வதி) ஆகியோருடன் வசித்துவருகிறார் கூட்டுக்குடும்பமாக. சிவாஜியின் தம்பி மணி (நம்பியார்) நன்கு படித்தவர். இந்தக் குடும்பத்துக்குள் அடி எடுத்துவைக்கிறார் சிங்கப்பூர் சிங்காரம் (எம்.ஆர்.ராதா). சொத்து ஆசையில் குடும்பத்துக்குள் குழப்பதை ஏற்படுத்தி இரண்டு குடும்பத்துக்கும் ‘பாகப் பிரிவினை’ செய்கிறார். இறுதியில் சிங்கப்பூரானின் சதியை முறியடித்து குடும்பம் ஒன்று சேர்வதுதான் கதை.

இசை, விஸ்வநாதன் – ராமமூர்த்தி. தாங்கள் மெல்லிசை மன்னர்கள் என்பதை இதன் பாடல்களிலும் நிரூபித்திருப்பார்கள் இருவரும். ‘பிள்ளையாரு கோயிலுக்கு’, ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’, ‘தாழையாம் பூமுடிச்சு’, ‘ஏன் பிறந்தாய் மகனே’ உட்பட பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இப்போது கேட்டாலும் சிலிர்க்கும் உணர்வைத் தருகின்றன.

சிவாஜி ஒரு கையை மடக்கி வைத்தபடி, காலை இழுத்து நடக்கும் நடிப்பு ரசிக்கப்பட்டது. எம்.ஆர்.ராதா சும்மாவே கலக்குவார். இதில் அவர் பேசும் நையாண்டி, சிவாஜி இவரை ‘சிங்கப்பூரான்’என்று அழைக்கும் ஸ்டைல் ஆகியவையும் அப்போது பேசப்பட்டன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் பாடல்களை எழுதியிருந்தார்கள். ஒரு தாலாட்டு பாடலை பட்டுக் கோட்டையிடம் எழுதிக் கேட்டபோது, ‘இதை கண்ணதாசன் எழுதினால் நன்றாக இருக்கும்’ என்றாராம் அவர். இயக்குநர் பீம்சிங் கண்ணதாசனைச் சந்தித்தார். ஆனால் கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் ஏற்கெனவே மனஸ்தாபம் இருந்ததால் தனது பாடல் வரிகளை அவர் ஏற்க மாட்டார் என நினைத்தார் கண்ணதாசன்.

சிவாஜியின் ஒப்புதலோடுதான் இதைக்கேட்கிறேன் என்று பீம்சிங் சொன்ன பிறகு எழுதினார் கண்ணதாசன். அந்தப் பாடல், ‘ஏன் பிறந்தாய் மகனே’. பிறகு ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’, ‘தாழையாம் பூ முடிச்சு’ஆகிய பாடல்களையும் எழுதினார் கண்ணதாசன்.

இவை ஹிட்டானதால், இனி தனது படங்களுக்கு கண்ணதாசனும் பாடல் எழுத வேண்டும் என கூறியிருக்கிறார் சிவாஜி. பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி பிரம்மாண்ட வெற்றியை தந்தது, ‘பாகப்பிரிவினை’.

ஏன் பிறந்தாய் மகனே?.. பாடல் ரெக்கார்டிங்கின்போது அந்தப் பாடலைப் பாடியடி.எம்.சவுந்தரராஜனின் மகன் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். படத்துக்காக பாடலைப் பாடி முடிக்கவேண்டிய சூழ்நிலை. மகன் உடல் நலக்குறைவால் போராடிக் கொண்டிருக்க, ரெக்கார்டிங்கின்போது அந்தப் பாடலை உணர்ச்சிப் பெருக்கோடு பாடி முடித்தார் டி.எம்.எஸ்! ரெக்கார்டிங் முடிந்து அவர்வீட்டுக்குச் சென்றபோது மகன் இறந்திருந்தார். இப்போதும் அந்தப் பாடலைக் கேட்டால் சோகம் மனதைக் கவ்வும்.

கூட்டுக்குடும்ப கலாச்சாரத்தை வலியுறுத்திய இந்தப் படத்துக்கு, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை இயக்குநர் பி.ஆர்.பந்துலு இந்தியில் கான்தான் என்ற பெயரில் சுனில் தத், நூதன் நடிப்பில் இயக்கினார். அங்கும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் ‘கலசி வுன்டே கலடு சுகம்’ என்ற பெயரிலும் கன்னடத்தில் ‘முறியாத மனே’, மலையாளத்தில் ‘நிறகுடம்’ ஆகிய பெயரிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

1959 ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது, இந்தப் படம்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »