Press "Enter" to skip to content

சென்னையில் புதன்கிழமை ‘லியோ’ வெற்றி விழா – ரசிகர்களுக்கு கட்டுப்பாடு?

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுகொண்டிருக்கும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும்போது, அதற்கு முன்னதாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாக்களில் அவர் சொல்லும் ‘குட்டி ஸ்டோரி’ பிரபலமானது. படத்துக்கு முன்னதாக ரசிகர்கள் விஜய் சொல்லும் கதைக்காக காத்திருந்தனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘லியோ’ படத்தில் அது நிகழாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம். தொடக்கத்தில் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த தயாரிப்பு நிறுவனம் பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், நாளை (நவம்பர் 1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். விஜய் அரசியலுக்கு வருகிறார் என பேசப்பட்டு வரும் நிலையில் நாளை நடக்கும் நிகழ்வில் விஜய்யின் பேச்சு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் ரசிகர் மன்ற அட்டை, ஆதார் அட்டை கொண்டுவருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முழு பாதுகாப்புடன் எந்தவித பிரச்சினையுமில்லாமல் நிகழ்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது. இதற்காக, மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லியோ: ‘ஆசிரியர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடியை வசூலித்தது. 12 நாட்கள் முடிவில் ரூ.540 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »