Press "Enter" to skip to content

நான்: ‘தாய்’ நாகேஷின் ‘கொமட்டுல குத்துவேன்!’

நடிகர் ரவிச்சந்திரன் வேலையாக இருந்த காலம் அது. 1967-ம் ஆண்டு அவர் நடிப்பில் எட்டு திரைப்படங்கள் வெளியாயின. அதில் சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று, ‘நான்’. ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடிப்பில் டி.ஆர்.ராமண்ணா இயக்கிய ‘குமரிப்பெண்’ வெற்றி பெற்றதால் அதே ‘சக்சஸ் காம்போ’வை கொண்டு உருவாக்கியப் படம் இது. இதன் கதை, வசனத்தை டி.கே.பாலு எழுதினார். விநாயகா பிக்சர்ஸ் டி.கே.ராமராஜன் தயாரித்தார்.

பிறந்த நாளுக்காக அரண்மனைக்கு அழைத்து வந்த தனது மகனின் நண்பர்களை, அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார், ராஜாவான அப்பா. இதைத் தாங்க முடியாத மகன் சின்ன ராஜா, வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். 15 வருடம் கழித்து மகன் திரும்பி வராத நிலையில், அந்த ஏக்கத்திலேயே இறந்துவிடுகிறார், ராஜா. அதற்கு முன், தனது மகனைக் கண்டுபிடித்து சொத்துகளை அவனிடம் கொடுக்க வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்கிறார். காணாமல் போன சின்ன ராஜாவைக் கண்டுபிடிக்க பேப்பரில் விளம்பரம் கொடுக்கிறார்கள். ‘நான் தான் ராஜாவின் மகன்’ என்று பங்களாவுக்கு மூன்று பேர் வந்து நிற்கிறார்கள். அதில் உண்மையான மகன் யார் என்பதுதான் கதை.

வழக்கமாக இது போன்ற கதைகளில் கதாநாயகன்தான் வாரிசாக வருவார். ஆனால், இந்தமூன்று பேருமே வாரிசில்லை என்பதும் உண்மையான வாரிசு யார் என்ற சஸ்பென்ஸும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பைக் கொடுத்தன.

ரவிச்சந்திரனோடு, ஜெயலலிதா, முத்துராமன், விஜயஸ்ரீ, மனோகர், அசோகன், நாகேஷ், மனோரமா, குட்டி பத்மினி, என்னத்த கன்னையா, சுருளி ராஜன் என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் அடிக்கடி, ‘என்னத்த சொல்லி, என்னத்த வந்து’என்று பேசுபவராக நடித்திருந்தார் கன்னையா. இந்த வசனம் ஒரே நாளில் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுச் சென்றது. பிறகுதான் அவர், ‘என்னத்த’ கன்னையா ஆனார்.

அசோகன், மொட்டைத் தலை பகைவனாக நடித்திருப்பார். மனோகரிடம் அவர் இழுத்துப் பேசும், ‘சிங்காரம் ஆறு மாசமா ஆளையும் காணோம், ஆறு லட்சத்துக்குக் கணக்கையும் காணோம்’ என்று பேசும் வசனம், அப்போது பிரபலம்.

டி.கே.ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனும் வாலியும் பாடல்கள் எழுதியிருந்தனர். ‘ராஜா, கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி’ பாடல் செம ஹிட். ‘போதுமோ இந்த இடம்’, ‘அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ’பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘அம்மனோ சாமியோ’ பாடலுக்கு ஜெயலலிதாவின் நடனமும் நாகேஷின் நடிப்பும் அபாரம்.

அந்தக் காலகட்டத்தில் பிரபலமாகி இருந்த, ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கில இசையின் மெட்டில் உருவானது, எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் வரும் ‘வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே’ என்ற பாடல். ஈஸ்ட்மென் கலரில் உருவான இந்தப் படத்தில் எம்.ஏ.ரெஹ்மான் ஒளிப்பதிவும் பாராட்டப்பட்டது.

சிவாஜி கணேசன் நடித்த ‘ஊட்டிவரை உறவு’, ‘இருமலர்கள்’, எம்.ஜி.ஆர் நடித்த ‘விவசாயி’ ஆகிய படங்களுடன் 1967ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது, ‘நான்’. 175 நாட்கள் ஓடி வசூல் அள்ளியது. அந்த வருடத்தில் வெளியான ஒரே வெள்ளி விழா படமாகவும் இது அமைந்தது.

இந்த 4 படங்களிலும் நாகேஷ் நடித்திருந்தார். ஆனால், ‘நான்’ படத்தில் அம்மா, மகனாகநடித்திருந்தார். ‘கொமட்டுல குத்துவேன்’ என்று அடிக்கடி பேசும் அந்த தாய் நாகேஷ்கதாபாத்திரம் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அதை ரசிகர்கள் கொண்டாடினர்.

நாகேஷ், கண்ணாடி அணிந்தபடி வருவார். அதில் ‘பிரைஸ் டேக்’தொங்கும். படப்பிடிப்பின்போது அதை நீக்கச் சொன்னார், இயக்குநர் ராமண்ணா. இல்லை, ‘இது நகைச்சுவையா இருக்கும், இப்படியே இருக்கட்டும்’ என்று அதை அப்படியே வைத்தார், நாகேஷ். அதுவும் ரசிக்கப்பட்டது.

இந்தப் படம் தெலுங்கில் ‘நேனன்டே நேனே’ என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது. ரவிச்சந்திரன் வேடத்தில் கிருஷ்ணாவும் (நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை) ஜெயலலிதா வேடத்தில் காஞ்சனாவும் நடித்தனர். இந்தியில் ‘வாரிஸ்’ என்ற பெயரில் மறுதயாரிப்பு ஆனது.ஜிதேந்திராவும் ஹேமமாலினியும் நடித்தனர்.

1967ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது ‘நான்’ திரைப்படம். 56 வருடங்கள் ஆனாலும் இப்போதும் சுவாரஸ்யம் கொடுக்கிற படம்தான் அது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »