Press "Enter" to skip to content

‘மார்க் ஆண்டனி’க்கு பிறகும் கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை? – விஷாலுக்கு உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா முன்பு, விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று வழக்கை தற்போது விசாரித்து வரும் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்படம் பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை வைப்பீடு செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்து படம் வெளியான பிறகும் கடனை ஏன் இன்னும் திருப்பி செலுத்தாமல் இருக்கிறார் என விஷால் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிதம்பரம், “நடிகர் விஷால் ரூ.15 கோடியை வைப்பீடு செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு மாற்றி அமைத்துள்ளது” என தெரிவித்தார். அதற்கு லைகா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, இரு நீதிபதிகள் உத்தரவில் அவ்வாறு எதுவும் மாற்றி அமைக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில், நீதிபதி பி.டி.ஆஷா ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி பி.டி.ஆஷா இந்த வழக்கை விசாரிப்பதே சரியாக இருக்கும் என்றார். அப்போது விஷால் தரப்பில் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »