Press "Enter" to skip to content

118 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம்

வாஷிங்டன்: கடந்த 118 நாட்களாக நடைபெற்று வந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சம்பளப் பற்றாக்குறை, ஏஐ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பு கடந்த மே மாத தொடக்கம் முதல் போராடி வந்தது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து ஹாலிவுட் நடிகர்களும் தங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படம் எழுத்தாளர்கள் உடனான தயாரிப்பு நிறுவனங்களின் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டதால் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் நடிகர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்களுடைய போராட்டம் மட்டும் முடிவுறாமல் நீடித்து வந்தது.

இந்தச் சூழலில், தயாரிப்பு நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால் 118 நாட்களாக நீடித்து வந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே கையெழுத்தான புதிய மூன்று ஆண்டு ஒப்பந்தம், SAG-AFTRA அமைப்பின் ஒப்புதலுக்காக நாளை அனுப்பிவைக்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நடிகர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு, ஸ்ட்ரீமிங் பங்கேற்பு கூடுதலான, ஏஐ தொழில்நுட்பத்துக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

ஹாலிவுட் நடிகர்களின் நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்ததால் நாளை (நவ.10) முதல் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »