Press "Enter" to skip to content

“நான் அல்ல… அண்ணாமலையும், பிரதமர் மோடியும்தான் நடிகர்கள்” – மன்சூர் அலிகான்

சென்னை: “நான் நடிகனே இல்லை. உலகத்தில் இரண்டே நடிகர்கள்தான். ஒன்று அண்ணாமலை, இரண்டாவது அவருக்கு மேல் இருக்கும் பிரதமர் மோடி” என நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு நடிக்கும் ஆசையே விட்டுப் போச்சு. இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இப்போது என்னை புக் செய்கிறார்கள். உங்களுக்குத்தான் பெரிய கதாபாத்திரம் என்கிறார்கள். நிறைய எடுக்கிறார்கள். நான் கைத்தட்டல் வாங்கும் காட்சிகளையெல்லாம் வெட்டி விடுகிறார்கள். குறிப்பிட்டு எந்தப் படத்தையும் சொல்லவில்லை. யாரும் சரியான கதாபாத்திரங்களை கொடுக்கவில்லை. அதனால் தீவிரமாக அரசியலில் இறங்கி, அண்ணாமலை ‘என் மக்கள் என் பயணம்’ செல்வது போல, ‘நம் மக்கள் நம் பயணம்’ போகலாம் என இருக்கிறேன். நான் நடிகனே இல்லை. உலகத்தில் இரண்டே நடிகர்கள்தான். ஒன்று அண்ணாமலை, இரண்டு அவருக்கு மேல் இருக்கும் பிரதமர் மோடி” என்றார்.

மேலும், “தமிழகம் முழுவதும் ஒரு ஏக்கருக்கு 26 தென்னை மரம், 20 பனை மரம் நட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏனென்றால், இப்போது வைத்தால் 13 வருடங்கள் கழித்துதான் பயன்பாட்டுக்கு வரும். பனை மரத்திலிருந்து வரும் பானத்தை உருவாக்கி மக்களுக்கு கொடுக்கலாம். மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும்” என்றார் மன்சூர் அலிகான்.

அவரிடம் விஜய் ‘கப்பு முக்கியம் பிகிலு’ என கூறியது குறித்து கேட்டதற்கு, “2026-ல் கப்பு முக்கியம் என்றுதானே சொன்னார். ஆமாம், கப்பு முக்கியம்தான். அதற்காகத் தானே விளையாடுகிறோம். அவர் கூட ‘கில்லி’ படத்தில் கப்புக்காகத் தான் விளையாடினார். கப்பின் அவசியம் அவருக்கு தெரியும். அதனால், அவர் தேர்தலில் போட்டியிடுவார்” என்றார். தொடர்ந்து “வாய்ப்பு அமைந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று மன்சூர் அலிகான் கூறினார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »