Press "Enter" to skip to content

திரை விமர்சனம்: டைகர் 3

ரா உளவாளியான அவினாஷ் சிங் ரத்தோர் என்ற டைகர் (சல்மான் கான்), ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் சக முகவர் கோபியை (ரன்வீர் ஷோரி) அதிரடியாகக் காப்பாற்றுகிறார். அவர், பாகிஸ்தானில் ஏதோ பெரிய சதி நடக்க இருப்பதாகவும் அந்தச் சதியில் பெண் ஐஎஸ்ஐ உளவாளியும் இருப்பதாகவும் அது உன் மனைவி ஸோயா (கேத்ரினா கைஃப்) என்றும் கூறுகிறார்.

அவர் சொன்னது உண்மையாகிறது. ஐஎஸ்ஐ முன்னாள் அதிகாரி அதிஷ் ரஹ்மானுக்காக (இம்ரான் ஹாஷ்மி) அவர் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை டைகரிடம் சொல்கிறார் ஸோயா. அதிஷ், ஆபத்தான டாஸ்க் ஒன்றைக் கொடுத்து, டைகரையும் ஸோயாவையும் துருக்கிக்கு அனுப்புகிறார். மகனை காப்பாற்றுவதற்காக அதைச் செய்ய ஒப்புக்கொள்கின்றனர் இருவரும். அதைச் செய்ததன் மூலம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரியாகிறார், டைகர். இதில் இருந்து எப்படி மீண்டு இரண்டு நாட்டுக்கும் டைகர் நல்லவராகிறார் என்பதை மூச்சு முட்டும் ஆக்‌ஷனில் முக்கி எடுத்துச் சொல்வது, மீதி கதை.

யஷ்ராஜ் பிலிம்ஸின், ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹே, வார், பதான் படங்களின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் அடுத்ததாக வந்திருக்கிறது, டைகர் 3. இதுபோன்ற படங்களில் என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான். இதிலும் அப்படியே. இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய், பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக அங்கு நடக்கும் சதியை முறியடித்து, அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நம் டைகர் எப்படி பெருமை சேர்க்கிறார் என்பதைச் சொல்லியிருக்கிறார், இயக்குநர் மனீஷ் ஷர்மா.

ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை பூச்சுற்றல்தான் என்றாலும் அதை மறக்கடிக்க வைக்கிற திரைக்கதையும் மிரட்டும் ஆக்‌ஷனும்தான் இதன் முந்தைய படங்களின் பலம். ஆனால், டைகர் 3 திரைக்கதையில் சுவாரஸ்ய பஞ்சம். பதானில் ஷாருக்கானை காப்பாற்றுவார் சல்மான். இதில் சல்மானை காப்பாற்றுகிறார் ஷாருக்கான். பதிலுக்கு பதில்தான் என்றாலும் ஷாருக்கான் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

வழக்கம் போல ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார் சல்மான் கான். கேத்ரினாவுக்கும் ஆக்‌ஷன் அதிரடியாக கை கொடுக்கிறது. அவருக்கும் ஹாலிவுட் நடிகை மிட்செல் லீ-க்குமான ‘டவல் பைட்’ மிரட்டல். பாகிஸ்தானின் பிரதமர் ஆவதற்கு ஆசைப்படும் இம்ரான் ஹாஷ்மி, தனது பகைவன் வேலையை அமைதியாக செய்து கடைசியில் உயிர்விடுகிறார்.

பாக். பிரதமராக சிம்ரன், ‘ரா’தலைவர் மைதிலி மேனனாக ரேவதி உட்பட துணை கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தனுஜ் டிக்குவின் பின்னணி இசை, கதையோடு இணைந்து செல்கிறது. அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் வெளிநாட்டு லொகேஷன்கள் ஒற்றிக்கொள்ளும் அழகு. விஎப்எக்ஸ் காட்சிகளும் கச்சிதம்.

ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பூட்டும் பிரம்மாண்டம் கவனிக்க வைக்கின்றது. பாகிஸ்தானில் நடக்கும் அந்த கிளைமாக்ஸ் டச்சிங்காக இருக்கிறது.

முடிவில் ஹிருத்திக் ரோஷன் என்ட்ரியாகி அடுத்த படத்துக்கு ‘லீட்’கொடுத்துப் போகிறார். ஆக்‌ஷன் மட்டுமே ஆசைதீர பார்த்தால் போதும்…வேறு சுவாரஸ்யமெல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு ‘டைகர் 3’ ஓகே-தான்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »