Press "Enter" to skip to content

“என் மகள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” – சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: ‘லால் சலாம்’ படத்தின் ஒலிநாடா வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: ‘சங்கி’ என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற அர்த்தத்தில் ஐஸ்வர்யா எங்குமே பேசவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர், அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதே அவருடைய பார்வை. ‘லால் சலாம்’ படம் நன்றாக வந்திருக்கிறது. மதநல்லிணக்கம் குறித்து பேசுகிறது. இப்போது நான் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருக்கிறேன். அந்தப் படமும் நன்றாக வந்துள்ளது” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், “அப்பாவ சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி இருந்திருந்தா அவர் லால் சலாம் படத்துல நடிச்சு இருக்க மாட்டார். ஏனெனில், இது மனித நேயம் மிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும்” என்று கூறியிருந்தார். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »