Press "Enter" to skip to content

‘ஏஐ மூலம் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்த குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றோம்’ – ஏ.ஆர்.ரஹ்மான்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர்களது குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த அவர்களது குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெற்று, அதற்கு தகுந்த சன்மானமும் வழங்கி உள்ளோம். தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தினால் ஒருபோதும் அது அச்சுறுத்தலாகவும், தொல்லையாகவும் அமையாது” என ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

மறைந்த பாடகர்களின் குரல் ஏஐ மூலம் லால் சலாம் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதும், ‘இதற்கு முறையான அனுமதி அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்டதா?’, ‘சன்மானம் வழங்கப்பட்டதா’ என இணையப் பயனாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் கொடுத்துள்ளார்.

லால் சலாம் படத்தின் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தை இயக்கி உள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »