Press "Enter" to skip to content

“பவதாரிணி உடனான கடைசி புகைப்படம்” – வெங்கட் பிரபு உருக்கம்

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணி உடனான கடைசி புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிப்பட்டு, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதையொட்டி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பவதாரிணியின் இறுதிச் சடங்கின்போது, அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை அவரது குடும்பத்தினர் பாடிய காணொளி பார்ப்பவர் மனதை கலங்கச் செய்வதாக இருந்தது. இந்த நிலையில் பவதாரிணியுடன் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ”பவதா உடனான எங்களது கடைசி புகைப்படம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் வெங்கட் பிரபுவுக்கு இணையப் பயனாளர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47). பின்னணி பாடகரான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாள படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். பின்பு ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். இந்நிலையில் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவருக்கும் இவருக்கும் திருமணமானது.

2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »