Press "Enter" to skip to content

“இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்” – திரைப்படத்தில் 28 ஆண்டுகள் குறித்து கிச்சா சுதீப் நெகிழ்ச்சி

பெங்களூரு: திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப் நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கன்னட திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். 1997ஆம் ஆண்டு வெளியான ‘தயவ்வா’ படத்தின் மூலம் துணை நடிகராக திரைப்படத்தில் நுழைந்தவர் அதன் பிறகு அஜித் நடித்த ‘வாலி’ படத்தின் கன்னட மறுதயாரிப்புகில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 2021ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே சுதீப் வரவேற்பைப் பெற்றார். 2015ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘புலி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில், திரைப்படத்தில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சுதீப், அது குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொழுதுபோக்குக்கான இந்த அற்புதமான துறையில் 28 ஆண்டுகள் தான் என் வாழ்வின் மிக அழகான காலகட்டம். ஈடற்ற இந்த பரிசுக்கு நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெற்றோர், குடும்பம், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், என்னுடைய சக நடிகர்கள், ஊடகம், பொழுதுபோக்கு சேனல்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இந்த பயணத்தில் ஓர் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நன்றி.

வாழ்க்கையில் எனது மிகச்சிறந்த சம்பாத்தியமாக இருக்கும், நிபந்தனையின்றி எப்போதும் என் மீது அன்பு செலுத்தி வரும், ரசிகர்கள் வடிவிலான என்னுடைய நண்பர்களை நான் அணைத்துக் கொள்கிறேன். அவர்களுக்கு என்னுடைய அன்பு.

இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றது. இதன் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்திருக்கிறேன். நான் குறைகள் இல்லாதவன் அல்ல. நான் கச்சிதமானவனும் அல்ல. வாய்ப்பு கிடைத்தபோது நான் முடிந்த அளவுக்கு சிறப்பான முயற்சியை கொடுத்திருக்கிறேன். என்னை நானாக ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு கிச்சா சுதீப் கூறியுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »