Press "Enter" to skip to content

‘ப்ளூ விண்மீன்’ வெளிவரக் கூடாது என சென்சாரில் நெருக்கடி இருந்ததாக பா.ரஞ்சித் பகிர்வு

சென்னை: “தொடக்கத்தில் படத்துக்கு சென்சார் தர முடியாது என கூறி மறுத்துவிட்டனர். ஒற்றுமையை வலியுறுத்தி, எல்லோரையும் ஒன்றாக இருக்கச் சொல்லும் ஒரு படம் வெளிவர கூடாது என சொல்லும் அளவுக்கு மாற்றுக் கருத்துடைய பலர் சென்சாரில் இருக்கிறார்கள்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்திபாண்டியன் நடித்துள்ள ‘ப்ளூ விண்மீன்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித், “சென்சார் போர்டு குழுவினர் படம் பார்த்தனர். நீலம் புரொடக்‌ஷன் படம் தணிக்கைக்கு வருகிறது என்றாலே, படத்தில் இதெல்லாம் இருக்கப் போகிறது என அலர்ட் ஆகிவிடுவார்கள். இந்தப் படத்துக்கு எந்தச் சிக்கலும் வராது என நினைத்தேன். ‘ப்ளூ விண்மீன்’ படம் வெளியாக கூடாது என அங்கே கருத்துகள் வெளிப்படத் தொடங்கின. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்தப் படத்தை ஏன் வெளியிட கூடாது என கேட்டபோது, ‘படம் சாதிய ரீதியாக உள்ளது. பூவை ஜெகன் மூர்த்தியார் படம் உள்ளது. அவர் கீழ் மகன் (ரவுடி) என கூறினர்’. பூவை மூர்த்தியார் எங்களை படிக்க வைத்தவர். பெரிய தலைவர் அவர். எங்களை படிக்க வைத்த அவரை எப்படி நீங்கள் கீழ் மகன் (ரவுடி) என கூறலாம் என கேள்வி வந்தது. எவ்வளவு பேசியும் சென்சார் தர முடியாது என கூறி விட்டனர். பின்னர் ரிவைஸிங்கில் மீண்டும் விண்ணப்பித்தோம். அதில் நிறைய மாற்றங்களைச் செய்யச் சொன்னர். அதன் பிறகுதான் சென்சார் கிடைத்தது. ஒரு படம் ஒற்றுமையை வலியுறுத்தி, எல்லோரும் ஒன்றாக இருக்கச் சொல்கிறது.

வேறுபாடுகளுக்கு எதிராக திரள கூறும் ஒரு படம் வெளிவர கூடாது என சொல்லும் அளவுக்கு மாற்றுகருத்துடைய பலர் சென்சாரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் படம் வெளியாகி மக்களிடையே சென்று சேர்ந்து வெற்றிபெற்றுள்ளது. உங்களுடன் முரண்படுவது, சண்டையிடுவது எங்களுக்கு விருப்பமில்லை. நாம் எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்பதை சொல்லும் படமாக இதனைப் பார்க்கிறேன்.

இதையே எத்தனை நாளைக்குத்தான் பேசுவார்கள் என்றால், என் பிரச்சினை இன்னும் தீரவில்லை. பேசித்தான் ஆகவேண்டும். மக்களை கனெக்ட் செய்யாமல், அதை கலையாக மாற்றாமல் இங்கே நின்றுகொண்டிருக்க முடியாது. மக்கள் விரும்பும் மொழியில் சொல்கிறோம். இந்த வெற்றி பலருக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. அந்த நம்பிக்கை சமூகத்தில் முடிந்த அளவுக்கு மாற்றத்தை உருவாக்கும் என எங்கள் படங்கள் மூலமாக நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »