Press "Enter" to skip to content

கதையின் நாயகனாக புகழ் நடிக்கும் ’மிஸ்டர் ஜு கீப்பர்’

சென்னை: நகைச்சுவை நடிகர் புகழ், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’. ஜெ4 ஸ்டூடியோ சார்பில் எஸ்.ராஜரத்தினம் மற்றும் டி. ஜெப ஜோன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜெ. சுரேஷ் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தன்வீர் மொய்தீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷிரின் காஞ்ச்வாலா நாயகியாக நடித்துள்ளார். சிங்கம்புலி, விஜய் சீயோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பிப்ரவரி மாதம் வெளியாகும் இந்தப் படம் பற்றி நடிகர் புகழ் கூறியதாவது: மலையடிவாரத்தில் வசிக்கும் அப்பாவியான ஒருவன் பூனை என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை வளர்க்கிறான். இதனால் அவன் சந்திக்கும் சவால்கள் என்ன, அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் படம். காடுகளைப் பாதுகாப்பது பற்றியும் நகைச்சுவையோடு குழந்தைகள் கொண்டாடும் வகையிலும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்தக் கதாபாத்திரத்துக்காக அணுகிய போது மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் புலியுடன் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்பதை படப்பிடிப்பில் உணர்ந்தேன். தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில், புலி தொடர்பான காட்சிகளைப் படமாக்கினோம். புலி, எப்போது என்ன மூடில் இருக்கும் என்பது தெரியாது. போதிய பயிற்சி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தக்கதையில் நாயகனாக நடித்தாலும் தொடர்ந்து நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடிப்பேன். இவ்வாறு புகழ் கூறினார். இந்தப் படம் தாய்லாந்தில் ‘நாய் சாவ்ன் சத்வ்’ என்ற பெயரிலும் மலாய் மொழியில் ‘என்சிக் பென்ஜகா ஜு’ என்றும் வெளியாக இருக்கிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »